- Home
- Cinema
- தொலைக்காட்சி
- விஜய் டிவி சீரியல்களை ஓட ஓட விரட்டி... டிஆர்பி ரேஸில் புது உச்சம்தொட்ட எதிர்நீச்சல் 2!
விஜய் டிவி சீரியல்களை ஓட ஓட விரட்டி... டிஆர்பி ரேஸில் புது உச்சம்தொட்ட எதிர்நீச்சல் 2!
திருச்செல்வம் இயக்கத்தில் சன் டிவியில் வெற்றிநடைபோட்டு வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், டிஆர்பி ரேஸில் புதிய சாதனை படைத்திருக்கிறது.

Ethirneechal Thodargiradhu TRP Rating
சன் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சீரியல்களில் எதிர்நீச்சலும் ஒன்று. கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சக்கைப்போடு போட்ட இந்த சீரியல் 2024-ல் முடிவுக்கு வந்தது. பின்னர் புதுப்பொழிவுடன் அதன் இரண்டாவது சீசனை எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கினர். முதல் சீசனில் ஜனனியாக நடித்த மதுமிதா விலகியதை அடுத்து அவருக்கு பதில் இந்த சீசனில் பார்வதி ஜனனியாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் அனைவரும் இந்த சீசனில் தொடர்கின்றனர். முதல் சீசனை போல் இரண்டாவது சீசன் இல்லை என்கிற பேச்சு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் போகப் போக இந்த சீசனும் பிக் அப் ஆக தொடங்கி உள்ளது.
விறுவிறுப்பான கதைக்களத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் தன்னுடைய மகன் தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ய, மறுபுறம் ஆதி குணசேகரனின் மனைவி ஈஸ்வரி தன் மகன் தர்ஷன் காதலிக்கும் பார்கவி உடன் அவனை சேர்த்து வைக்க முயல்கிறார். இதில் தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு செம விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்கள். இதனால் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் வார வாரம் ஜெட் வேகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
டிஆர்பியில் அசுர வளர்ச்சி கண்ட எதிர்நீச்சல் 2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த மாதத்தில் இருந்தே டிஆர்பியில் பிக் அப் ஆக தொடங்கியது. குறிப்பாக கடந்த மாத தொடக்கத்தில் 7.56 ஆக இருந்த எதிர்நீச்சல் 2 சீரியலின் டிஆர்பி, அடுத்த வாரமே 7.93 ஆக அதிகரித்தது. அதற்கு அடுத்த வாரம் 8.36 டிஆர்பி புள்ளிகளை பெற்ற இந்த சீரியல், கடந்த வாரம் 8.49 ரேட்டிங் பெற்று அசத்தி இருந்தது. இதுவே அந்த சீரியல் பெற்ற அதிகபட்ச ரேட்டிங் ஆக இருந்த நிலையில், இந்த வாரம் அதைவிட கூடுதலாக டிஆர்பி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். இந்த வாரம் இந்த சீரியலுக்கு 8.90 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து அதற்கு கிடைத்த அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங் இதுவாகும்.
விஜய் டிவி சீரியல்களை பந்தாடிய எதிர்நீச்சல் தொடர்கிறது
ஜூன் மாதம் வரை டாப் 10 சீரியல்கள் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், ஒரே மாதத்தில் கடகடவென முன்னேறி 4-ம் இடத்தை பிடித்துள்ளது. அதிலும் டிஆர்பி ரேஸில் விஜய் டிவி சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை ஆகியவற்றை அடிச்சு துவம்சம் செய்துள்ளது எதிர்நீச்சல் 2. தற்போது அனைத்து விஜய் டிவி சீரியல்களையும் விட அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்று கெத்து காட்டி உள்ளது எதிர்நீச்சல் 2 தொடர். இனி தர்ஷன் திருமண எபிசோடு வருவதால், இந்த சீரியல் டிஆர்பி ரேஸில் முதலிடம் பிடிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.