41 பேர் பலி.! தவெகவினர் எங்கே.? அஞ்சலி செலுத்த செல்லாதது ஏன்.? இது தான் காரணமா.?
Vijay political rally tragedy : விஜயின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 16 பெண்கள் உள்ளிட்டோர் பலியானார்கள்.
கரூர் நகரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்படும்போது கூட்டம் கலைவதற்காக அலைந்தபோது கடுமையான நெரிசல் ஏற்பட்டது. தவெக தலைமை தரப்பு 10,000 பேர் வருவதாகக் கூறியிருந்தாலும், உண்மையில் 27,000-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் 39 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது, பின்னர் 40-ஆக உயர்ந்து, இன்று (செப்டம்பர் 29) மேலும் ஒரு பெண் உயிரிழந்ததால் 41-ஆகியுள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த ஹேமலதா என்ற தாயும், அவரது இரு குழந்தைகளும் இதில் பலியானார்கள். இந்த சம்பத்தில் தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல் குற்றவாளியாக கரூர் மாவட்ட செயலாளர், இரண்டாவது குற்றவாளியாக புஸ்ஸி ஆனந்த், 3வது குற்றவாளியாக சிடி நிர்மல் குமார் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
கரூர் விபத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தரப்பில் 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பாக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தவெக தலைவர் விஜய், தனது சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கரூரில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தேமுதிக தலைவர் பிரேமலதா உள்ளிட்டவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது மட்டுமில்லாமல் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ஆனால் தவெக கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு தவெக முக்கிய நிர்வாகிகள் யாரும் அஞ்சலியோ ஆறுதலோ தெரிவிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் எங்கே என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
கரூரில் சம்பவம் நடைபெற்ற போது அனைத்து தலைவர்களும் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற போது தவெக நிர்வாகிகள் மட்டும் சென்னையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு செல்லாதது தொடர்பான கேள்வி விடை கிடைத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக நிர்வாகிகள் செல்லும் பட்சத்தில் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அச்சமான நிலை காரணமாகவே அஞ்சலி செலுத்த செல்லவில்லையென தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தவெக முக்கிய நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க ஆதவ் அர்ஜூனா செல்ல இருப்பதாகவும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தவெகவினர் சார்பாக போலீசாருக்கு மனு கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தே கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து தவெக சார்பில் நிதி உதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.