ED RAID : யார் இந்த ஐ. பெரியசாமி.! எம்ஜிஆரையே அலறவிட்டவரா..?
தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

தமிழக அமைச்சரை குறிவைத்த அமலாக்கத்துறை
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருப்பவர் ஐ .பெரியசாமி, திமுகவிலும் துணை பொதுச்செயலாளராக உள்ளார். இந்த நிலையில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது. ஐ. பெரியசாமி மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள அவரது வீடுகள், உறவினர்கள் வீடுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.குறிப்பாக 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ. பெரியசாமி பதவி வகித்தபோது, காவல்துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர் சேட்டின் மனைவி மற்றும் மகள் பெயர்களில் சட்டவிரோதமாக இடங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அமலாக்கத்துறை சோதனைக்கு காரணம் என்ன.?
இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போல வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறையும் இந்த புகாரை கையில் எடுத்துள்ளது.
ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஐ. பெரியசாமியை 9 மணி நேரம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லம், திருவல்லிக்கேணி எம்எல்ஏ விடுதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது மகன் செந்தில்குமார் மற்றும் மகள் இந்திராணியின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெறுகின்றன.
யார் இந்த ஐ பெரியசாமி
இந்த நிலையில் யார் இந்த ஐ.பெரியசாமி என்பதை பார்ப்போம், பள்ளி காலம் தொட்டே தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு வருகிறார் ஐ.பெரியசாமி. 1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த எம்.ஜி.ஆரை வத்தலகுண்டுக்குள் நுழையவிடமாட்டேன் என அறிவித்து தமிழகத்தையே அதிர வைத்தவர் ஐ.பெரியசாமி.
இதனையடுத்து திமுக தலைமையால் அடையாளம் காணப்பட்ட ஐ.பெரியசாமி முதன் முதலில் வத்தலகுண்டு ஒன்றியத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அடுத்தாக 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக ஆத்தூரில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்வானார்.இதனை தொடர்ந்து ஐ.பெரியசாமியின் அரசியல் வளர்ச்சி உச்சம் தொட்டது.
ஐ . பெரியசாமியின் வளர்ச்சி
செல்வாக்கோடு பலம் வாந்த நிர்வாகிகளாக இருந்த மாயத்தேவர், முத்துசாமியை தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அடுத்ததாக 1996ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது அப்போது ஆத்தூர் தொகுதியில் இருந்து மீண்டும் வெற்றிபெற்றிருந்த ஐ .பெரியசாமி முதன் முறையாக அமைச்சராக பதவி ஏற்றார்.
2006- 2011 ஆம் ஆண்டிலும் அமைச்சராக பதவிவகித்தார். 2021ம் ஆண்டு தேர்தலில் வென்று முதலில் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அமலாக்கத்துறையின் சோதனையில் ஐ.பெரியசாமி சிக்கியுள்ளார்.