தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் திராவிட மாடலின் தாக்கம் என்ன? அண்ணா முதல் ஸ்டாலின் வரை சாதித்த திட்டங்கள்.?
திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. திமுகவின் திட்டங்கள் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் அமைந்தவை மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுகின்றன. கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டை வடிவமைத்தவர், அரசின் அனைத்து மட்டங்களிலும் இடஒதுக்கீட்டை செயல்படுத்தி, அதிகாரத்தை பகிர்ந்தளித்து, சமூக சமத்துவத்தை உருவாக்கினார்.
திமுகவின் 75ஆண்டுகால சாதனை
திராவிட முன்னேற்றக் கழகம் 1949ல் அறிஞர் அண்ணாவாலும் அவரது தம்பிமார்களாலும் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கட்சி ஆகும். திமுக என்கிற கட்சி அடுத்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதுவரை காங்கிரஸ் தமிழகத்தில் காலூண்டிய நிலையில் தேசிய கட்சி எதுவொன்றும் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத நிலையை ஏற்படுத்தியது. திமுக ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் தமிழ்நாட்டின் அரசியல்-சமூகம்-பொருளாதாரம்- பண்பாடு ஆகியவற்றை உருவப்படுத்தி வருகின்றது.
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் போராடுகின்ற அரசியல்தான் திமுக அரசியல்; திராவிடமாடல் அரசியல். திமுக ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றும் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் அமைத்தவை. திராவிடமாடல் மக்கள் நலத் திட்டங்கள் இன்று இந்தியாவின் எல்லா மாநில அரசியலுக்கும் முன்னோடியாக அமைந்தவை.
இட ஒதுக்கீடு
கிராம வருவாய் நிர்வாகம் ஒரு அரசுப் பணியாளரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அரசின் சார்பில் அவர்தான் கிராமத்தை நிர்வகிப்பார். இப்படியாக, கிராம நிர்வாகம் பழைய நிலஉடமை அதிகாரத்திடமிருந்து பறிக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்துகளும் ஊராட்சி ஒன்றியங்களின் பிடியிலிருந்த வளர்ச்சித்துறைகளும் அனைத்தும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இதனால் பழைய அதிகாரம் வளர்ச்சிப் பணிகளில் நேரடியாகத் தலையிட முடியாத சூழல் உருவானது. ஊராட்சித் தேர்தல்களில் சுழற்சிமுறையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது காலம்காலமாக ஆதிக்கம் செலுத்திய குடும்பங்களின் பழைய அதிகாரம் குறைந்தது.
karunanidhi
விலையில்லா அரிசி திட்டம்
அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் இடஒதுக்கீடு முழுமையாக செயல்பட்டது. கல்வியின் கதவுகள் பல மட்டங்களில் சமுதாயத்தின் பல பிரிவினருக்கும் திறக்கப்பட்டன. உள்ளூராட்சி நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள் உட்பட பலவித பள்ளிகளும் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கல்வி உரிமை என்பது நிதர்சனம் ஆனது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, தமிழ்நாட்டு குடும்பங்கள் அனைத்திற்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
கிலோ அரிசி 2 ரூபாய்க்கும் பின்னர் ரூ. 1 எனவும் அதன் பின்னர் அது விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. சாலை வசதிகளை விரிவுபடுத்துதல், போக்குவரத்தில் வலுவான ஒரு பொதுத்துறையை உருவாக்கி நாட்டிலேயே சிறந்ததொரு கிராமப்புற நகர்ப்புற தொடர்பு வசதியை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் வளர்ச்சி
இது மட்டுமில்லாமல் உயர்கல்வியில் மாணவர்களை பெருமளவில் கொண்டு சேர்த்தல், தொழில்மயமாதலை ஊக்குவித்தல், புதிய தொழில்வாய்ப்புகளை கண்டுணர்ந்து அதற்கான முன்னெடுப்புகள் என பல தளங்களிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தியது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய மாநிலங்களிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது. வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக உருவானது. பொருளாதார வளர்ச்சியும் சமூக மாற்றமும் கைகோர்த்து முன்நகர்ந்து வருகிறது.
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையான 23.32 கோடி கொண்ட உத்திரப்பிரதேச மாநிலம் வசூல் செய்த GST தொகை ரூ.7004 கோடியாகும். தமிழ்நாடு அதே காலகட்டத்தில் தனது 7.66 கோடி மக்களிடம் வசூலித்தது ரூ. 8634 கோடியாகும். உத்திரப்பிரதேசத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாடு சராசரியாக தனி நபர் அளவில் ஏறத்தாழ நான்கு மடங்கு கூடுதலாக செலவு செய்வது இந்த பொருளாதாரத்தை ஜனநாயகமயமாக்கத்தால் நிகழ்ந்ததே.
திமுக அரசின் பெண்களுக்கான சாதனை திட்டங்கள்
மாநில அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்தி, சமுதாயத்தின் பெரும் பகுதியினரிடம் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அதிகார கட்டமைப்புக்குள் சமூக சமநிலை உருவாக்கியது; பொதுவிநியோக முறையை உருவாக்கி, வலுப்படுத்தி, உணவை ஜனநாயகப்படுத்தியது முதலானவற்றை உணர்வுப்பூர்வமாகத் தமது ஆட்சியின்போது செயற்படுத்தியவர், எதிர்கட்சியாக இருந்தபோது பாதுகாத்தவர் ‘தமிழ்நாட்டை வடிவமைத்தவரான’ கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் என்பது மறக்கக்கூடியதன்று.” “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற முழுக்கத்தின் அடிப்படையில் பல திட்டங்கள் தீட்டப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு நிர்வாகத்தை மக்கள் எளிதாக அணுக உங்கள் தொகுதியில் முதலமைச்சர், மக்களுடன் முதலமைச்சர் முதலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், மகளிர் கட்டமில்லா பேருந்து பயணத் திட்டம் ஆகியவை முத்தான மூன்று திட்டங்கள் ஆகும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், திராவிட மாடல் பொதுநலக் கட்டமைப்பில் ஒரு புரட்சி ஆகும்.