- Home
- Tamil Nadu News
- மே 1 முதல் சென்னை மக்களுக்கு டேஞ்சர் அலர்ட் கொடுத்த வெதர்மேன் பிரதீப் ஜான்.. மற்ற மாவட்டங்கள் நிலவரம் என்ன?
மே 1 முதல் சென்னை மக்களுக்கு டேஞ்சர் அலர்ட் கொடுத்த வெதர்மேன் பிரதீப் ஜான்.. மற்ற மாவட்டங்கள் நிலவரம் என்ன?
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மே 1 முதல் வெயில் 40 டிகிரியைத் தாண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் இம்முறை எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதமே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக கரூர், வேலூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 30 முதல் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில்: மே 1ம் தேதியில் இருந்து KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய வட தமிழக மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மாநிலத்தின் பிற பகுதிகளில் மழை திரும்பும். மே 1, 2 முதல் உள்நாட்டு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்கினாலும், ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடும் வெயிலும் சுட்டெரிக்கும்.
சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40°C-ஐ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்ரல் 7 அன்று பதிவான 42°C மீண்டும் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது. எளிய வார்த்தைகளில் சொன்னால், ஆந்திராவுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடலோரத்தின் மிகவும் அருகிலுள்ள பகுதிகள் மட்டும் சற்றே தப்பிக்கலாம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வட தமிழ்நாடு மக்கள் கவனிக்கவும்: மே 1, 2 முதல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் செல்லாமல் இருக்கவும். எப்போதும் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

