- Home
- Tamil Nadu News
- பேருந்து மீது நின்ற உங்களுக்கு எதுவும் தெரியவில்லையா..? விஜய்யை ரவுண்டு கட்டிய சிபிஐ அதிகாரிகள்
பேருந்து மீது நின்ற உங்களுக்கு எதுவும் தெரியவில்லையா..? விஜய்யை ரவுண்டு கட்டிய சிபிஐ அதிகாரிகள்
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக இரண்டாவது நாளாக சிபிஐ முன்பாக விசாரணைக்கு ஆஜரான தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யிடம் கேட்கப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யை இறுக்கும் கரூர் சிபிஐ விசாரணை
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் உருவான கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கிய இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக விஜய் ஆஜர்
அசம்பாவிதம் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 3 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். அதே போன்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், பாதுாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விஜய்யிடம் கேள்விகளை அடுக்கிய அதிகாரிகள்
இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “பரப்புரைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நேரம் என்ன?
தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன?
கூட்டம் அதிகமிருக்கிறது. தள்ளுமுள்ளு உருவாகியிருக்கிறது. தண்ணீர் வசதி இல்லை. இதுபோன்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
அப்படி தெரிந்திருந்தும் நீங்கள் பேச்சைத் தொடர்ந்தீர்களா?
கூட்ட நெரிசல் உருவானதும் உங்கள் பேரணியை நிறுத்தியிருக்கலாமே? எதற்காக நிறுத்தவில்லை?
பேருந்து மீது நின்றிருந்த உங்களுக்கு எதுவும் தெரியவில்லையா? நெரிசலை எப்போது உணர்ந்தீர்கள்? உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயர்..
இதனிடையே வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அதாவது பிப்ரவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தாக்கல் செய்ய சிபிஐ அதிகாரிகள் திட்டம் முடிவு செய்துள்ளனர். மேலும் குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
