நம் தேசத்திற்கு எதிரானவர் உதயநிதி..! பியூஸ் கோயல் கடும் குற்றச்சாட்டு
தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் நம் தேசத்திற்கே எதிரானவர். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாசாலத்திற்கு எதிரானதை பேசும் உதயநிதி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தெரிவித்துள்ள கருத்து திமுக மற்றும் தவெகவினரின் தூக்கத்தைக் கலைத்துள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற மற்றும் மிகவும் மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. மேலும் திமுக அரசு தமிழக மக்களிடையே மோசமான நிலையைக் கொண்டுள்ளது. துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கும் கருத்துகள் தமிழ் கலாசாரத்திற்கு எதிரானது.
தேசத்திற்கே எதிரானவர் உதயநிதி
உதயநிதியின் கருத்துகள் தேசத்திற்கு எதிரானது. மேலும் அவர் நம் தேசத்திற்கே எதிரானவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் முற்றிலும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே ஒற்றுமை இல்லை. திமுக கூட்டணியில் தொடரலாமா? தவெகவுக்கு செல்லலாமா என்ற இரட்டை நிலைப்பாட்டோடு காங்கிரஸ் இருக்கின்றது.
விஜய்யை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை
திமுக கூட்டணியில் நிலவும் ஒற்றுமையிண்மை காரணமாக அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் எளிதில் வெற்றி பெறும். நடிகர் விஜய் ரசிகர் மன்றங்களை மட்டும் வைத்துக் கொண்டு தேர்தலில் தாக்கத்தை உருவாக்க முடியாது. ஸ்டார் நடிகர்கள் வருவார்கள், போவார்கள் ஆனால் எந்த பாதிப்பும் இருக்காது. அவரால் சில வாக்குகளை பிரிக்க முடியும். விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை. கூட்டணிக்குள் வரவழைப்பது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

