- Home
- Tamil Nadu News
- TASMAC: டாஸ்மாக்கில் 'ஹனி பீ' உள்பட 11 மதுபானங்கள் விற்பனைக்கு அதிரடி தடை.. 'குடி'மகன்கள் ஷாக்!
TASMAC: டாஸ்மாக்கில் 'ஹனி பீ' உள்பட 11 மதுபானங்கள் விற்பனைக்கு அதிரடி தடை.. 'குடி'மகன்கள் ஷாக்!
TASMAC: டாஸ்மாக்கில் 'ஹனி பீ' உள்பட 11 மதுபானங்கள் விற்பனைக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. 'குடி'மகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தடை குறித்து விரிவாக பார்க்கலாம்.

டாஸ்மாக்கில் 11 மதுபானங்கள் விற்பனைக்கு தடை
தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், அனைத்து டாஸ்மாக் கடைகளின் முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பணிமனை மேலாளர்களுக்கு அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தனியார் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் 11 வகையான மதுபானங்களின் விற்பனையை டாஸ்மாக்கில் உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மதுபானங்கள் விற்பனைக்கு தடை ஏன்?
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் அமைந்துள்ள ‘மெசர்ஸ் என்ரிகா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தெற்கு மண்டல மத்திய அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில், அந்நிறுவனம் தயாரிக்கும் மதுபான வகைகளில் இயற்கைக்கு இணையான மற்றும் செயற்கைச் சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, FSSAI அமைப்பின் உத்தரவு மற்றும் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரின் பரிந்துரையின் பேரில், டாஸ்மாக் நிர்வாகம் 11 மதுபானங்களின் விற்பனைக்கு அதிரடி தடை விதித்துள்ளது.
விற்பனை தடை செய்யப்பட்டுள்ள 11 மதுபான வகைகள் என்னென்ன?
1. வி.எஸ்.ஓ.பி. எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி (VSOP EXSHAW GOLD BRANDY)
2. லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்.ஓ. பிளெண்டட் பிரீமியம் பிராந்தி (LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY)
3. மெக்டொவல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி (பிளெண்டட் பிராந்தி) (Mc Dowells VSOP Brandy - Blended Brandy)
4. நம்பர் 1 மெக்டொவல்ஸ் ஃபைன் பிராந்தி (இந்தியன் பிராந்தி) (NO.1 McDowell's Fine Brandy - Indian Brandy)
5. மேன்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி (இந்தியன் பிராந்தி) (MENSCLUB Deluxe Brandy - Indian Brandy)
6. ஹனி பீ ஃபைன் பிராந்தி (இந்தியன் பிராந்தி) (HONEY BEE FINE Brandy - Indian Brandy)
7. என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலெக்ட் பிராந்தி (ENRICA VSOP SELECT BRANDY)
8. என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்.ஓ. பிராந்தி (ENRICA PLATINUM RESERVE XO BRANDY)
9. என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி (ENRICA PREMIUM FRENCH BRANDY)
10. வீரன் ஸ்பெஷல் பிராந்தி (VEERAN SPECIAL BRANDY)
11. என்ரிகா ஓல்ட் இண்டி கிளாசிக் டார்க் ரம் (ENRICA OLD INDIE CLASSIC DARK RUM)
குடோன்களில் இருந்து கடைகளுக்கு அனுப்பத் தடை
குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இந்த 11 வகை மதுபானங்களையும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்ப உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது.
பார்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு விற்பனைத் தடை: எஃப்.எல்.2 மற்றும் எஃப்.எல்.3 உரிமம் பெற்ற பார்கள், நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றுக்கு இந்த பிராண்டுகளை விற்பனை செய்யக் கூடாது.
பொதுமக்களுக்குச் சில்லறை விற்பனை செய்யத் தடை: மறு உத்தரவு வரும் வரை, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் இந்த 11 வகை மதுபானங்களையும் நுகர்வோருக்கு/பொதுமக்களுக்கு விற்பனை செய்யக் கூடாது.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருவதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக்கில் மேற்கண்ட 11 மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

