- Home
- Tamil Nadu News
- postal philately passport : 58 சுற்றுலா இடங்களுக்கு ஒரே பாஸ்போர்ட்..அஞ்சல் துறையின் புதிய முயற்சி!
postal philately passport : 58 சுற்றுலா இடங்களுக்கு ஒரே பாஸ்போர்ட்..அஞ்சல் துறையின் புதிய முயற்சி!
postal philately passport : ரூ.650 விலையில் அஞ்சல் துறை அறிமுகப்படுத்திய போஸ்டல் பிலாட்டலி பாஸ்போர்ட் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. 58 இடங்களில் பிரத்யேக அஞ்சல் முத்திரைகளைச் சேகரிக்கலாம். எங்கு வாங்கலாம்? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? முழு விவரங்கள்

போஸ்டல் பிலாட்டலி பாஸ்போர்ட்
பாஸ்போர்ட் என்றாலே வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும், விமான நிலையத்தில் குடியேற்றச் சோதனைகளைக் கடப்பதற்கும் பயன்படும் ஆவணம் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வேறொரு பாஸ்போர்ட் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறது. அதுதான் 'Philately Passport' எனப்படும் தபால் தலை சேகரிப்பு பாஸ்போர்ட்.
சுற்றுலா செல்வது, பிடித்த இடங்களில் புகைப்படம் எடுப்பது, அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் பதிவிடுவது எனப் பலரும் தங்களது பயணங்களை ரசித்து வருகின்றனர்.
ஆனால், இனி சுற்றுலா செல்லும் இடங்களின் நினைவுகளைத் தபால் தலைகள் மற்றும் பிரத்யேக தபால் முத்திரைகள் மூலம் சேகரிக்கலாம் என்றால் எப்படி இருக்கும்? அந்த அனுபவத்தைத்தான் இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த வித்தியாசமான போஸ்டல் பிலாட்டலி பாஸ்போர்ட்.
குறிப்பாக, கர்நாடகாவில் இந்த பாஸ்போர்ட்டுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள் மற்றும் தபால் தலை சேகரிப்பாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலை என்ன? யாரெல்லாம் வாங்கலாம்? எங்கு வாங்கலாம்? இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? விரிவாகப் பார்க்கலாம்.
போஸ்டல் பிலாட்டலி பாஸ்போர்ட்
போஸ்டல் பிலாட்டலி பாஸ்போர்ட் என்றால் என்ன?
போஸ்டல் பிலாட்டலி பாஸ்போர்ட் (Philately Passport )என்பது இந்திய அஞ்சல் துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறப்பு நினைவுப் புத்தகம் ஆகும். பிலாட்டலி (Philately) என்றால் தபால் தலைகளைச் சேகரிப்பது மற்றும் அவற்றைப் பற்றிய வரலாறு, கலை, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்வதாகும்.
இந்தப் பாஸ்போர்ட் பார்ப்பதற்கு சாதாரண பாஸ்போர்ட் போன்ற வடிவமைப்பில் இருக்கும். ஆனால், இதில் வெளிநாட்டுப் பயணத்திற்கான விசா அல்லது குடியேற்ற முத்திரைகள் இடம்பெறாது.
அதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கோயில்கள், இயற்கைச் சூழல்கள் மற்றும் பாரம்பரியக் கட்டடங்கள் தொடர்பான பிரத்யேக அஞ்சல் முத்திரைகளைச் சேகரிக்க முடியும். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ள இந்தப் பாஸ்போர்ட்டில் மொத்தம் 58 இடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாஸ்போர்ட் எதற்குப் பயன்படும்?
இந்தப் பாஸ்போர்ட்டின் முக்கிய நோக்கம் சுற்றுலாவையும் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தையும் ஒன்றிணைப்பதாகும்.
பயண நினைவுகள்: நாம் சுற்றுலா சென்ற இடங்களின் நினைவுகளைத் தபால் முத்திரைகள் மூலம் பாதுகாக்கலாம்.
வரலாற்றை அறிதல்: ஒவ்வொரு இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
தபால் தலை சேகரிப்பு: புதிய தலைமுறையினரிடையே தபால் தலை சேகரிக்கும் ஆர்வத்தை உருவாக்குகிறது.
சுற்றுலா ஆர்வம்: இதுவரை செல்லாத பல இடங்களுக்கும் சென்று பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
தனிப்பட்ட சேகரிப்பு: ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பிரத்யேக அஞ்சல் முத்திரைகளைக் கொண்டு தனித்துவமான நினைவுப் புத்தகத்தை உருவாக்கலாம்.
இது எப்படி செயல்படுகிறது?
இந்தப் பாஸ்போர்ட்டின் முக்கிய அம்சம் Permanent Pictorial Cancellation (PPC) எனப்படும் நிரந்தரப் பட அஞ்சல் முத்திரைகள் ஆகும்.
- முதலில் ரூ.650 செலுத்தி பிலாட்டலி பாஸ்போர்ட்டை வாங்க வேண்டும்.
- பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 58 இடங்களில் உங்களுக்குப் பிடித்த இடத்திற்குச் செல்லலாம்.
- அந்த இடத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட அஞ்சல் நிலையத்திற்குச் சென்று, அங்கு கிடைக்கும் நிரந்தரப் பட அஞ்சல் முத்திரையைப் பாஸ்போர்ட்டில் பதித்துக்கொள்ள வேண்டும்.
- இதேபோன்று ஒவ்வொரு இடத்திற்கும் சென்று முத்திரைகளைச் சேகரிக்கலாம்.
ஒவ்வொரு முத்திரையிலும் அந்த இடத்தின் அடையாளப் படம் இடம்பெறும். அதனுடன் தேதியும் பதிவாகும். இதனால், குறிப்பிட்ட இடத்திற்கு எந்த நாளில் சென்றோம் என்பதற்கான நினைவையும் பாதுகாக்க முடியும்.
இடங்கள்
தமிழகத்தில் எந்தெந்த இடங்கள் இடம்பெற்றுள்ளன?
தமிழ்நாடு பிலாட்டலி பாஸ்போர்ட்டில் 58 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், பாரம்பரிய அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
உதாரணமாக,
சோழர் காலக் கட்டடக்கலையின் சிறப்பை நினைவுபடுத்தும் வரலாற்றுச் சின்னமான தஞ்சாவூர் பெரிய கோயில், கன்னியாகுமரி, ஏரி மற்றும் பறவைகள் சரணாலயச் சிறப்புகள் கொண்ட பழவேற்காடு, வனவிலங்குகள் மற்றும் இயற்கைச் சூழலுக்குப் பெயர் பெற்ற முதுமலை போன்றவை.
பாஸ்போர்ட்டின் விலை எவ்வளவு?
தமிழ்நாடு பிலாட்டலி பாஸ்போர்ட் விலை - 650
யாரெல்லாம் இந்தப் பாஸ்போர்ட்டை வாங்கலாம்?
இந்தப் பாஸ்போர்ட்டை வாங்குவதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு அல்லது தொழில் சார்ந்த தகுதி இருப்பதாக அறிவிக்கப்படவில்லை.
- தபால் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ளவர்கள்
- சுற்றுலாப் பயணிகள்
- கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்
- வரலாறு மற்றும் பாரம்பரியக் கட்டடங்கள் மீது ஆர்வமுள்ளவர்கள்
- குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள்
- சமூக வலைதளங்களில் பயண அனுபவங்களைப் பகிர்பவர்கள்
- வித்தியாசமான நினைவுப் பொருட்களைச் சேகரிப்பவர்கள்
எங்கு வாங்கலாம்?
தமிழகத்தில் எங்கு வாங்கலாம்? தற்போது விற்பனை நடைபெறுகிறதா?
விற்பனை மையங்கள் மற்றும் அலுவலக நேரம்
சென்னை - அண்ணா சாலை
காலை 10 மணி - மாலை 6 மணி
044-28543199
கோவை தலைமை அஞ்சல் நிலையம்
காலை 10 மணி - மாலை 5 மணி
0422-2382930
மதுரை தலைமை அஞ்சல் நிலையம்
காலை 9.30 மணி - மாலை 5.30 மணி
0452-2345300
புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம்
காலை 10 மணி - மாலை 6 மணி
0413-2336532
திருச்சி தலைமை அஞ்சல் நிலையம்
காலை 10 மணி - மாலை 6 மணி
0431-2415618
டிஜிட்டல் உலகில் மீண்டும் பழைய நினைவுகள்
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தங்களது பயண நினைவுகளை மொபைல் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் பாதுகாக்கின்றனர். ஆனால், பிலாட்டலி பாஸ்போர்ட் கையில் வைத்துப் பார்க்கக்கூடிய ஒரு நினைவுப் பதிவை உருவாக்குகிறது. இதுவும் இளைஞர்களைக் கவரும் முக்கிய அம்சமாக இருக்கிறது.
சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்
அஞ்சல் வட்டம் அறிமுகப்படுத்திய பிலாட்டலி பாஸ்போர்ட் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாஸ்போர்ட்டை வாங்குவதற்கு அதிகாலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.











