இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடப்பது பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மகாராஷ்டிரா என பாஜக ஆளும் மாநிலங்களில் தான் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெறுகிறது. திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பெண் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்ணாடியை பார்த்து பேசிய மோடி
இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிய பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய உதயநிதி, ''தேர்தல் காலம் வந்து விட்டதால் பிரதமர் மோடி இனி அடிக்கடி தமிழகத்துக்கு வருவார். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி, இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மைக் என நினைத்து கண்ணாடியை பார்த்து பேசிவிட்டு சென்றுள்ளார்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த கேடு கெட்ட கட்சி பாஜக
பாஜக ஆட்சி நடந்த மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை நடந்தது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்ததால் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டது. குஜராத்தில் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் பக்கம் நின்றது பாஜக அரசு. உத்தரபிரதேசத்தின் ஹர்ராஸில் பட்டியலின சிறுமிக்கு வன்கொடுமை நிகழ்ந்தது. இப்படி குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த கேடு கெட்ட கட்சி தான் பாஜக.
ஓட்டு கேட்க வெட்கமா இல்லையா?
இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடப்பது பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மகாராஷ்டிரா என பாஜக ஆளும் மாநிலங்கள் தான். பெண்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்து விட்டு தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க வெட்கமா இல்லையா? மோடி என பெண்கள் கேட்கிறார்கள். இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் தமிழகத்துக்கு வந்தால் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. தமிழகத்துக்கும் பாதுகாப்பு இருக்காது'' என்று தெரிவித்துள்ளார்.


