பாரதிய ஜனதா கட்சியின் உருட்டல், மிரட்டல்களுக்கு பயப்பட நாங்கள் ஒன்றும் அண்ணா திமுக கிடையாது, அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திமுக, முதல்வர், துணைமுதல்வர் குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதில் அளித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்ட துணைமுதல்வர் உதயநிதி பேசுகையில், “அண்மையில் தமிழகம் வந்த அமைச்சர் அமித்ஷா என்னை விமர்சித்து பேசியுள்ளார்.

என் பெயரைக் குறிப்பிட்டு பேசிய அவர், உதயநிதியை முதல்வராக்க விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். நான் முதல்வராக வேண்டும் என்று கேட்டேனா..? அவர் எப்பொழுதும் என் நினைப்பாகவே இருந்து கொண்டிருக்கிறார்.

நீங்கள் எவ்வளவு தான் கூப்பாடு போட்டாலும் முதல்வர் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்காமல் தமிழக மக்கள் விடமாட்டார்கள். இதுபோன்ற உங்கள் உருட்டல் மிரட்டல்களுக்கு அடிபணிய நாங்கள் என்ன அண்ணா திமுகவா..? அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக.

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இதனை யாராலும் தடுக்க முடியாது. மேலும் புதுசு புதுசாக யார் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்யமுடியாது. மேலும் புதிதாக வருபவர்கள் வெறும் காகித அட்டைப் போன்றவர்கள் தான். வெறும் காற்றடித்தாலே காணாமல் போய்விடுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.