தவெக ஆர்ப்பாட்டம்: விஜய் தொண்டர்களுக்கு 12 அறிவுரைகள் அறிவிப்பு!
காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஜூலை 13, 2025 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களுக்கு 12 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்கும் விஜய்
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் காவல் நிலையத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டும், குறிப்பாக சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நாளை (ஜூலை 13, 2025) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
காவல் நிலையத்தில் மரணம்
அஜித்குமார் மரணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக வலியுறுத்துகிறது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்த நிலையில், இது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கட்சி கோருகிறது.
சென்னை, சிவானந்தா சாலையில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
அமைதியான ஆர்ப்பாட்டம்
* ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10 மணிக்குத் தொடங்குவதால், அதற்குத் தகுந்தாற்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்றுகூட வேண்டும்.
* வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும்.
* ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாகவும், அமைதியாகவும் நடத்த வேண்டும்.
* ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வரவோ, நிறுத்தவோ கூடாது.
* போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஒத்துழைக்க வேண்டும்.
தலைக்கவசம் கட்டாயம்
* தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.
* எந்த ஒரு மத, சாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.
* தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் அல்லது முழக்கங்களை எழுப்புதல் கூடாது.
* ஆர்ப்பாட்டத்தின்போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது, அவற்றை எரிப்பது, புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.
இடையூறு ஏற்படக் கூடாது
* ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.
* ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்.
* கழகத்தின் கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்படக் கூடாது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் ஆர்ப்பாட்டம் அமைதியாகவும், கட்டுக்கோப்பாகவும் நடைபெறும் என்று தவெக தெரிவித்துள்ளது.