விஜய் தலைமையில் நாளை தவெக ஆர்ப்பாட்டம்! காவல்துறை போட்ட 16 நிபந்தனைகள்!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து, நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. காவல்துறை 16 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

விஜய் தலைமையில் த.வெ.க ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை காவல்துறை 16 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
அஜித்குமார் கொலை வழக்கு
அஜித்குமார் கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்று கூறி மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்நிலையில், அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
16 நிபந்தனைகள்
த.வெ.க.வின் ஆர்ப்பாட்டத்தில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம் நடந்தத காவல்துறை 16 நிபந்தனைகளும் விதித்துள்ளது. அதில், பட்டாசு வெடிக்கக் கூடாது, இருசக்கர வாகன ஊர்வலம் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், காவல் விசாரணையில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை சனிக்கிழமை அன்று விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்களின் கோரிக்கைகளை மனுவாகப் பெற்றுக்கொண்டார்.