- Home
- Tamil Nadu News
- இது திராவிட மாடல் இல்ல, 'சாரி மா' மாடல் அரசு! தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேசம்!
இது திராவிட மாடல் இல்ல, 'சாரி மா' மாடல் அரசு! தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேசம்!
மடப்புரம் சம்பவத்தில் உயிரிழந்த அஜித் குமாருக்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லாக்-அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் விஜய் வலியுறுத்தினார்.

விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியரான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கேட்டும் தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. முதலில் சி.பி.சி.ஐ.டி வசம் இருந்த இந்த வழக்கு, தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
"சாரி வேண்டாம்... நீதி வேண்டும்"
அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தவெக சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில், "சாரி வேண்டாம்... நீதி வேண்டும்" போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தமிழகத்தில் லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
24 குடும்பங்களிடமும் சாரி கேளுங்க
அரசியல் களமிறங்கிய பின்னர் தவெக தலைவர் விஜய் தலைமையில் களமிறங்கியுள்ள முதல் போராட்டம் இதுவாகும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் விஜய், “அஜித்குமார், சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர்; அந்த குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, சி.எம். சார் சாரி சொன்னீங்க. அது தப்பில்லை. ஆனால் இதே ஆட்சியில 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்காங்க அவங்க குடும்பத்துக்கும் சாரி சொல்லிருங்க ஸ்டாலின் சார்…. இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுக்க வேண்டும்.” எனக் கூறினார்.
அவமானமாக இல்லையா?
"அன்று சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ் வழக்கை சிபிஐக்கு மாற்றியபோது, அது மாநில அரசுக்கு அவமானம்னு சொன்னீங்க ஸ்டாலின். இன்று அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றியது அவமானம் என்றால் அஜித்குமார் வழக்கு சிபிஐக்கு மாற்றியது அவமானம் இல்லையா?
சிபிஐ ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாகத்தான் செயல்படுகிறது. அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்து நீங்களும் ஏன் அவர்கள் பின்னால் போய் ஒளிந்துகொள்கிறீர்கள்.
நடக்கக் கூடாதது எது நடந்தாலும் அதிகபட்சமாக முதல்வரிடம் இருந்து “சாரி” என்ற பதில்தான் வருகிறது. திமுக அரசு நிர்வாகத் திறனற்று இருக்கிறது. இந்த வெற்று திமுக ஆட்சி திராவிட மாடல் அரசு அல்ல, ‘சாரி மா’ மாடல் ஆட்சி.
எல்லாவற்றுக்கும் நீதிமன்றம்தான் தலையிட்டு கேள்வி கேட்கிறது. சாத்தான்குளம் வழக்கு, அண்ணா பல்கலை வழக்கு, அஜித்குமார் வழக்கு என நீதிமன்றம்தான் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. எல்லாவற்றிலும் நீதிமன்றம்தான் தலையிட வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சி.எம். சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்?" என்றும் தவெக தலைவர் விஜய் பேசினார்.