வரலாம்... வரலாம் வா... ஒருத்தருக்காக தனி விமானம்- கெத்து காட்டும் விஜய்
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இன்று திருச்சியில் முதல் பொதுப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், மரக்கடையில் பொதுமக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார்.

பொதுமக்களை சந்திக்கும் விஜ்
தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகராக கலக்கி வந்த விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது, பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை, தனது பனையூரில் உள்ள அலுவலகத்தில் செய்து வந்தார். இதன் அடுத்த கட்டமாக கடந்த வருடம் விக்கிரவாண்டியில் ஒரு மாநாட்டையும், கடந்த மாதம் மதுரையில் ஒரு மாநாட்டையும் நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்பொழுது பொதுமக்கள் அதிகம் கூடும் வீதிகளில் வலம் வந்து, பொதுமக்களை நேரடியாக சந்தித்து, தனது எண்ண ஓட்டங்களை எடுத்துக் கூற உள்ளார். இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்குபுறப்பட்டுள்ளார். இதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 8 10 மணிக்கு புறப்பட்ட விஜய், 8: 40 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
தனி விமானத்தில் விஜய்
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய நுழைவாயில் 6க்கு வந்தடைந்தவர், விஜய் காரில் இருந்து இறங்கியதும் செய்தியாளர்களை பார்த்து கைகளை அசைத்தார். இதனையடுத்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி ஐமரக்கடையில் தனது பிரச்சார பேருந்தில் இருந்தபடியே பொதுமக்களை சந்தித்து உரை நிகழ்த்துகிறார்.
திருச்சியில் பிரச்சாரம் தொடங்கும் விஜய்
இதனையடுத்து அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மதியம் 2 மணி அளவில், விஜய் பொதுமக்களிடம் தனது பிரச்சாரத்தை செய்ய உள்ளார். இதுவரை தனது கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்களை சந்தித்து வந்த விஜய், முதன்முதலாக பொதுமக்களை சந்தித்து உரையாட உள்ளார்.
கடந்த இரண்டு மாநாடுகளில், பாஜக மற்றும் திமுக எதிர்ப்பு அரசியலை முன்னிலைப்படுத்தி களம் கண்டு வருகிறார். தற்பொழுது பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் பொழுது, அந்தந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள், இதற்கு இதுவரை ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகள் எடுக்காத நடவடிக்கைகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு தீர்வு காணும் வழிமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பேசப்போகிறார் விஜய்
மேலும் அந்தந்த மாவட்டங்களில் நிலவி வரும் பொதுமக்களின் முக்கிய பிரச்சினைகளை கேட்டறிந்துள்ள தவெக தலைவர் விஜய், அந்த பிரச்சனைகளை மையப்படுத்தி உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விஜய், அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆளுங்கட்சி அமைச்சர்கள் பற்றியும், அவர்களைப் பற்றிய குறைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.