- Home
- Tamil Nadu News
- விளம்பரம் வேண்டாம்.. 41 குடும்பங்களுக்கும் சத்தமில்லாமல் ரூ.20 லட்சத்தை வழங்கிய விஜய்
விளம்பரம் வேண்டாம்.. 41 குடும்பங்களுக்கும் சத்தமில்லாமல் ரூ.20 லட்சத்தை வழங்கிய விஜய்
கரூர் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.20 லட்சத்தினை கட்சியின் தலைவர் விஜய் எந்தவித விளம்பரமும் இன்றி வழங்கினார்.

விளம்பரம் இல்லாமல் உதவி செய்த விஜய்..
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது ஆறுதலை தெரிவித்துவிட்டு அவர்களுக்கான நிவாரணத் தொகையையும் வழங்கி வருகின்றனர்.
வீடியோ காலில் ஆறுதல்
இதனிடையே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடைபெற்று தற்போது வரை விஜய் பாதிக்கப்பபட்டவர்களை நேரில் பார்க்கவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி..?
இதனைத் தொடர்ந்து விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க உள்ளதாகவும், இதற்காக மாவட்டத்தில் பெரிய திருமண மண்டபத்தில் வைத்து நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பாதிக்கப்பட்டவர்களை தனித்தனியாக வீடுகளுக்கு சென்று சந்தித்தால் பொதுமக்கள் கூட்டம் கூடி இடையூறு ஏற்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளாக சொல்லப்பட்டது.
விளம்பரம் இன்றி உதவி செய்த விஜய்..
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதனை கருத்தில் கொண்டு எந்தவித ஆடம்பரமும் இன்றி தவெக சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.