தவெக - தேமுதிக கூட்டணி? பிரேமலதாவால் பரபரக்கும் தமிழக அரசியல் களம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் விஜய், விஜயகாந்த்தை அண்ணன் எனக் குறிப்பிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் விஜய்யை தம்பி எனக் குறிப்பிட்டு இருவரின் உறவு நீண்டகாலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதில் இருந்தே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான ஆளும் திமுக, எதிர்க்கட்சிகளான அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆனால் முதல் முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் வழிநெடுகிலும் பேனர் வைக்கப்பட்டது. அதில் ஒரு பேனர் மட்டும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேனரில் விஜய் தோள் மீது விஜயகாந்த் கை போட்டிருப்பது போன்ற புகைப்படம் இடம்பிடித்திருக்கிறது. மேலும் வைரத்தை இழந்துவிட்டோம்.. தங்கத்தை இழந்துவிடமாட்டோம்.. என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
பின்னர் மதுரை மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்: நான் மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எம்.ஜி.ஆர் தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா என்று கூறி அரசியல் அரங்கை அதிரவிட்டார்.
இந்நிலையில், மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் விஜயகாந்த்தை அண்ணன் என குறிப்பிட்ட நிலையில் விஜய் எங்களுக்கு தம்பி, அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு, கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது இந்த உறவு என்றார். பல்வேறு படங்களில் கேப்டனின் சிறு வயது கேரக்டர்களை விஜய்தான் பண்ணியிருக்கிறார். எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கேப்டனுக்குமான உறவு என்பது, கேப்டனை வைத்து 17 படங்களை அவர் இயக்கியிருக்கிறார். இன்றைக்கு அரசியலுக்கு வந்ததால் அண்ணன் தம்பி என்று இல்லை. கேப்டன் சினிமா துறையில் காலடி வைத்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அந்த நட்பு அப்படியே தொடர்கிறது என்றார். விஜயகாந்த் தொடர்பான விஜய்யின் பேச்சும் பிரேமலதா பேட்டியையும் பார்க்கும் போது தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.