அதிமுக கோட்டையில் போட்டியிட விரும்பும் டிடிவி தினகரன்? எந்த தொகுதி? என்ன காரணம்?
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய டிடிவி தினகரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிடிவி.தினகரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அக்கட்சி பிளவுபட்டது. இந்நிலையில் அதிமுகவின் 18 எம்எல்ஏக்களை தன்வசம் வைத்து கொண்டு இபிஎஸ்ஸுக்கு டிடிவி.தினகரன் கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். 18 பெரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இபிஎஸ் ஓபிஎஸ் ஒன்றாக இணைந்து அதிமுகவையும், ஆட்சியையும் வழிநடத்த டிடிவி.தினகரன் தனிமைப்படுத்தப்பட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
2017ம் ஆண்டு இரட்டை இலை பெறுவதற்காக இடைத்தரகர் சுரேஷ் சந்திரா என்பவருக்கும் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் கைதானார். பின்னர் இரண்டு மாதங்கள் சிறையில் இருந்த டிடிவி.தினகரன் குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெறாததால் சிறையில் இருந்து வெளியே வந்தார். தினகரன் கைதான அடுத்த வருடமே அதாவது 2018ம் ஆண்டு மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜெயலலிதாவின் தொண்டர்களை ஒருங்கிணைப்பது தான் கட்சியின் நோக்கம் என்றும் அறிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த தினகரன்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு போட்டியாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கிய தினகரன் பல தொகுதிகளில் வாக்குகளை பிரித்து அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதன் பிறகு தனது அரசியல் செயல்பாடுகளை படிப்படியாக குறைத்துக் கொண்ட டிடிவி. தினகரன் அறிக்கைகள், பேட்டிகள் என்று அளவில் மட்டுமே தன்னை சுருக்கிக்கொண்டார்.
அதிமுக - பாஜக கூட்டணி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த அவர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரும் தனது பழைய தோழருமான தங்க தமிழ்ச்செல்வனிடம் தோல்வியை தழுவினர். இந்நிலையில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக டிடிவி.தினகரன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட பிறகு இந்த கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் எவை என்பது பற்றி அமித்ஷாவோ எடப்பாடியோ இன்னும் வாய் திறக்கவில்லை.
ஆண்டிப்பட்டி தொகுதி
ஆனால் தினகரனோ தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாகவும் தனக்கு பின்னால் தான் அந்த கூட்டணியில் அதிமுக இணைந்தது என்றும் கூறி வருகிறார். ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் தினகரனை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகமாக இருந்து வரும் நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியை குறிவைத்து மறைமுகமாக தேர்தல் பணியை துவங்கி இருக்கிறார் டிடிவி தினகரன். எம்ஜிஆர் ஜெயலலிதா என முக்கிய தலைவர்கள் போட்டியிட்டு வென்ற ஆண்டிப்பட்டி ஒரு ஸ்டார் தொகுதி. அதிமுகவின் கோட்டையான இந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் தினகரன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் இந்த தொகுதியில் வரும் ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும் சுமார் 54,000 வாக்குகளை பெற்று கவனத்தையும் ஈர்த்தார்.
முக்குலத்தோர்
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகும் தேனி மாவட்டத்திற்கு தினகரன் தொடர்ச்சியாக விசிட் அடித்து முக்கிய கட்சி நிர்வாகிகளை கூட்டி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தவிர கட்சி நிர்வாகிகளின் சுக, துக்க நிகழ்ச்சிகள் தவறாமல் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதைத் தவிர கோவில் கும்பாபிஷேக விழாக்களுக்கு நிதி அளிப்பது, ஏழை மாணவர்கள் கல்வி உதவித்தொகை என சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆண்டிபட்டியில் பல காரியங்களை செய்து வருவதாக கூறுகின்றனர். பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணியிலும் இறங்கியுள்ளராம். குறிப்பாக ஆண்டிபட்டி தொகுதியில் முக்குலத்தோர் சேர்ந்தவர்களே பிரதான என்பதால் அதுவும் தனது வெற்றியை உறுதி செய்யும் என்று தினகரன் நம்புவதாக கூறப்படுகிறது.