- Home
- Tamil Nadu News
- கடலூர்
- கடலூரில் பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்! பலி எண்ணிக்கை உயர்வு!
கடலூரில் பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்! பலி எண்ணிக்கை உயர்வு!
கடலூரில் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கேட் கீப்பரின் அலட்சியம் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ரயில்வே துறை விபத்து குறித்து விளக்கமளித்துள்ளது.

பள்ளி வேன் மீது ரயில் மோதல்
கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில், வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு
இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் தொண்டமாநத்தத்தை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர் நிவாஸ், 11ம் வகுப்பு மாணவி சாருமதி உயிரிந்தனர். மேலும், வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மாணவன் செழியன் சிகிச்சை பலனின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
ரயில்வே கேட் கீப்பர் மீது தாக்குதல்
இந்த விபத்துக்கு காரணம் ரயில்வே கேட்டில் பணியிருந்த ஊழியர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் தூங்கியதால் விபத்து நடந்ததாக முதலில் கூறப்பட்டது. இதனையடுத்து ரயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து அவரை மீட்டனர். இந்த விபத்தை அடுத்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
ரயில்வே துறை விளக்கம்
செம்மங்குப்பத்தில் ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடுவதற்கு கேட் கீப்பர் முயற்சி செய்தார். அப்போது பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்றார். பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றபோது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மோதியதாக ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது
கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதியதாக மக்கள் கூறியுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் ஆய்வுக்கு பிறகு பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும்.