- Home
- Tamil Nadu News
- விஜய் தலைமையில் கூட்டணி.. தேர்தல் நேரத்தில் எதிர்பாரா அணி மாற்றங்கள்.. கொளுத்திப்போடும் டிடிவி
விஜய் தலைமையில் கூட்டணி.. தேர்தல் நேரத்தில் எதிர்பாரா அணி மாற்றங்கள்.. கொளுத்திப்போடும் டிடிவி
TTV Dhinakaran, TVK Vijay | 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக நிர்வாகிகள் கூட்டம்
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பணி வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே தனியார் அரங்கில் அமமுக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.
அமமுக தலைமையில் கூட்டணி..?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தினகரன், “2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. விஜய்யின் தலைமையிலான கூட்டணியுடன் சேர்த்து தமிழகத்தில் 4 முனை போட்டி அமையும். அமமுக தலைமையில் கூட்டணியை உருவாக்குவதா? அல்லது வேறு கூட்டணியில் இணைவதா என்பது தொடர்பாக விரைவில் தெரிவிக்கப்படும்.
தேர்தலுக்கு முன் மாறும் அணிகள்
எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதைப் பார்த்தால் தங்களால் தனித்து நிற்க முடியாது என்பதால் அழைப்பு வருவதாக தெரிகிறது. தேர்தலுக்கு முன்பாக கூட்டணியில் அணி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். இது தான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்திக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.