பழனிசாமி இருந்தா கூட்டணி இல்லை... பாஜகவுக்கு தினகரன் போட்ட கண்டிஷன்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வேண்டாம்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பத்து ஆண்டுகளாக தான் யாரிடமும் தொடர்பில் இல்லை என்றும், நாளுக்கு ஒரு பேச்சு பேசுபவன் தான் இல்லை என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அவரை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
என்.டி.ஏ. கூட்டணிக்கு கன்டிஷன்
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நான் யாரிடமும் தொடர்பில் இல்லை. நான் தினமும் ஒரு பேச்சு பேசுபவன் இல்லை. எடப்பாடி பழனிசாமி பாஜகவின் பாதுகாப்பில்தான் இருந்தார். இப்போதெல்லாம் பழனிசாமியின் முகம் வாடி காணப்படுகிறது. அவரை விட்டுவிடுங்கள். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அவரை நாங்கள் ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர மாட்டோம்." எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
தனிப்பட்ட பகை இல்லை
“பழனிசாமிக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை. எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தான் முதலமைச்சராக்கினோம். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் யாருடையது என்பது எனக்குத் தெரியும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் முதலமைச்சராகிவிடுவேன் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தார்.” எனவும் டிடிவி தினகரன் கூறினார்.
மகிழ்ச்சியான செய்தி வரும்
“நான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் டெல்லி செல்வதாக இருந்தது. வரும் டிசம்பர் மாதத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வரும். அண்ணாமலையும் நானும் தினமும் பேசி வருகிறோம். பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் கூறியதில் எனக்கு வருத்தம் எதுவும் இல்லை. அண்ணாமலையின் குணத்திற்கும் என்னுடைய குணத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.