இன்றைய TOP 10 செய்திகள்: செங்கோட்டையன் விதித்த கெடு... சீமான் நடத்தும் மாநாடு...
அதிமுகவில் முக்கிய தலைவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் எடப்பாடிக்கு டெட்லைன் விதித்துள்ளார். தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை இணைக்காவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எடப்பாடிக்கு டெட் லைன் விதித்த செங்கோட்டையன்
அதிமுகவில் முக்கிய தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்துள்ளார். டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்காவிட்டால் எடப்பாடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.
இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய செங்கோட்டையன்
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. 6 அமைச்சர்கள் சென்று , பிரிந்து போனவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி இடம் வலியுறுத்தினோம். அதை எதையும் கேட்க அவர் தயாராக இல்லை என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மலைகளுடன் பேசப்போகும் சீமான்!
சீமான், மலைகள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து காப்பாற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மலைகளுக்கான மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த காவல் நிலையங்களுக்கு விருது
தமிழகத்தில் 48 காவல் நிலையங்கள் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடித்த காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் ஏற்கனவே பரிசளித்த நிலையில், தற்போது மீதமுள்ள காவல் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களில், தென்மண்டலத்தில் இருந்து மதுரை உசிலம்பட்டி டவுன், விருதுநகரின் மல்லாங்கிணறு, சிவகங்கை டவுன், தென்காசியின் பாவூர்சத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
தனியாக புலம்பும் டிரம்ப்
வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நம்பிக்கை மெலிந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்ட டிரம்ப், இந்தியாவும் ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். "அவர்களுக்கு நீண்ட வளமான எதிர்காலம் கிடைக்கட்டும்!" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
50% வரியை சமாளிக்க அதிரடி பிளான் வருது!
இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு, அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை சமாளிக்க, கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதைப் போல, ஒரு சிறப்பு சலுகைத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா அரசு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால், ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள இந்திய தொழில் துறைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ரூ.2000 நோட்டு – இன்னும் செல்லுமா?
உங்களிடம் ₹2,000 நோட்டுகள் இருந்தால், அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், பேலாப்பூர், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், லக்னோ, ஜம்மு, கான்பூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைகளுக்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் தரும் தொகைக்குச் சமமான பணத்தைத் திரும்பப் பெறலாம்.
சீன ராணுவ அணிவகுப்பை பார்த்து மிரண்டு போன மேற்குலகம்!
சீனாவின் வெற்றி விழா ராணுவ அணிவகுப்பில் அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ராக்கெட் ஏவுதளம், அதிநவீன ட்ரோன்கள் ஆகியவை இதில் அடங்கும். இது உலக நாடுகளுக்கு வலுவான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ராணுவ அணிவகுப்பின் முடிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன மக்கள் விடுதலை ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ஆயுதப் படையாக மாற்றுவோம் என சூளுரைத்தார். இது, பொருளாதார வல்லரசாக மட்டும் இல்லாமல், ராணுவ வல்லரசாகவும் தன்னை நிலைநிறுத்த சீனா விரும்புகிறது என்பதை ஜின்பிங்கின் பேச்சு உணர்த்தியுள்ளது. இதனால்தான் சீனாவின் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு வலுவான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மதராஸி விமர்சனம்
மதராஸி படத்தின் கதையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சட்டவிரோத ஆயுதக் கடத்தலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. வட இந்திய மாஃபியாவுக்கும், இரண்டு சிறப்பு அதிரடிப் படைகள் இடையே நடக்கும் ஆக்ஷன் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. நாயகன் சிவகார்த்திகேயன் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரகு தனது காதலியைக் காப்பாற்ற களமிறங்குகிறார், ஆனால் அவரது நிலையற்ற மனநிலை அவரை வன்முறை பக்கம் இழுத்துச் செல்கிறது. இதனால் அவர் ஹீரோவா அல்லது வில்லனா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல், பழிவாங்கல், தியாகம், நட்பு, இரண்டு குழுக்களுக்கு இடையிலான போர் போன்ற அம்சங்கள் கதையில் முக்கியமாக இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.