இந்தியா விரைவில் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார். ரஷ்ய எண்ணெய் கொள்முதல் இந்தியாவுக்கு தவறானது என்றும் அவர் விமர்சித்தார்.
இந்தியா ஓரிரு மாதங்களில் அமெரிக்காவிடம் மன்னிப்புக் கேட்கும் என்றும் மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரும் எனவும் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கருத்து:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவின் மீது அதிகபட்சமாக 50% வரி விதித்த பின்னரே, இந்தியா-அமெரிக்க உறவுகள் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு சரிவைக் கண்டன. மேலும், உக்ரைன் போரை "மோடியின் போர்" என அவரது வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், டிரம்ப் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹோவர்ட் லட்னிக் பேட்டி:
அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமான ப்ளூம்பர்க்கிற்கு பேட்டியளித்த லட்னிக், "வாஷிங்டன் எப்போதும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது" என்று தெரிவித்தார். அதே சமயம், ரஷ்ய எண்ணெயை இந்தியா அதிக அளவில் வாங்குவது "இந்தியாவுக்கு தவறானது" என அவர் விமர்சித்தார்.
"எனவே, ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களில், இந்தியா பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வருத்தம் தெரிவித்து, டொனால்டு டிரம்ப்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். மோடியுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது டொனால்டு டிரம்ப்பின் மேஜையில் இருக்கும், அதை அவரிடமே விட்டுவிடுகிறோம். அதனால்தான் அவர் ஜனாதிபதி," என லட்னிக் கூறினார்.
ரஷ்ய எண்ணெய் கொள்முதல்:
ரஷ்யாவுடனான மோதலுக்கு முன்பு, இந்தியா தனது எண்ணெய் தேவையில் 2 சதவீதத்திற்கும் குறைவாகவே ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாகவும், "இப்போது அவர்கள் தங்கள் எண்ணெயில் 40 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறார்கள்" என்றும் லட்னிக் விமர்சித்தார். மேலும், இந்தியா அமெரிக்க டாலரை ஆதரிக்க வேண்டும் என்றும், பிரிக்ஸ் அமைப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"சீனர்கள் எங்களுக்கு விற்கிறார்கள். இந்தியர்களும் எங்களுக்கு விற்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் விற்க முடியாது. நாங்கள் தான் உலகின் நுகர்வோர். நமது 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்தான் உலகின் நுகர்வோர் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், இறுதியில் அவர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களிடம் திரும்பி வர வேண்டும், ஏனென்றால் வாடிக்கையாளர் எப்போதும் சரியானவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்" என அவர் மேலும் கூறினார்.
