இந்தியாவை இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம்... தனியாக புலம்பும் டிரம்ப்!
சீனாவுடன் இந்தியா மற்றும் ரஷ்யாவின் நெருக்கம் குறித்து டொனால்டு டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மூன்று நாடுகளும் ஒன்றிணைந்தது குறித்து அவர் மர்மமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இந்தியா பற்றி டொனால்டு டிரம்ப் பதிவு
வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நம்பிக்கை மெலிந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்ட டிரம்ப், இந்தியாவும் ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். "அவர்களுக்கு நீண்ட வளமான எதிர்காலம் கிடைக்கட்டும்!" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டத்தில் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து நின்ற பின்னணியில் டிரம்பின் இந்தப் பதிவு வந்துள்ளது.
முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை வென்ற 80-வது ஆண்டு நிறைவையொட்டி சீனா நடத்திய ராணுவ அணிவகுப்பில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்வதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
வரிவிதிப்பும் பின்னடவும்
"பில்லியன் கணக்கான டாலர்கள் ரஷ்யாவிற்கு இழப்பாகும், இது நடவடிக்கை இல்லை என்று கூறுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியிருந்த டிரம்ப், "இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சொன்னேன், இந்தியா வாங்குமானால், இந்தியாவுக்கு பெரிய பிரச்சனைகள் இருக்கும், அதுதான் நடக்கிறது" என்றும் கூறியிருந்தார்.
இந்தியாவை "அதிக வரி விதிக்கும் நாடு" என்றும் அவர் விமர்சித்திருந்தார். "சீனா வரிகள் மூலம் நம்மை கொல்கிறது, இந்தியா வரிகள் மூலம் நம்மை கொல்கிறது, பிரேசில் வரிகள் மூலம் நம்மை கொல்கிறது" என்று அவர் கூறினார். மேலும், இந்தியா "வரி இல்லாத" ஒப்பந்தத்தை முன்மொழிந்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார். "எனக்கு வரிகள் இல்லாவிட்டால், அவர்கள் ஒருபோதும் அந்த ஒப்பந்தத்தை செய்ய மாட்டார்கள். எனவே வரிகள் இருக்க வேண்டும்" என்று அவர் ஒரு வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் எதிர்ப்பு
இந்தியா மீது டிரம்ப் 50% வரிகளை விதித்திருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வரிகளை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த சர்ச்சை மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்துள்ளது.