உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியாவிற்கு 50% வரி! டிரம்ப் நீதிமன்றத்தில் வாதம்!
உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியாக டிரம்ப் நிர்வாகம் விதித்த வர்த்தக வரிகளை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம், தனது வர்த்தக வரிகள் (Tariffs) சட்டவிரோதமானது என அறிவித்த பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் தனது மனுவில், இந்த வர்த்தக வரிகள், "உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய அம்சம்" என்று வாதிட்டுள்ளது. "உக்ரைனில் நிலவும் போர் தொடர்பான தேசிய அவசரநிலையை சமாளிக்க, இந்தியா ரஷ்ய எரிபொருள் பொருட்களை வாங்குவதற்கு எதிராக அதிபர் IEEPA சட்டத்தின் கீழ் வரிகளை விதித்துள்ளார். இது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு முக்கிய அம்சமாகும்," என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிற்கு இரட்டிப்பு வரி
சமீபத்தில், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. ஆகஸ்ட் 27-ஆம் தேதி, டிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு எதிரான வரிகளை 50% ஆக இரட்டிப்பாக்கியது. இதில் பாதி, ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு இந்தியா ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்ததற்கான தண்டனையாகவும், மீதி பாதி, டிரம்ப்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" (America First) கொள்கையின் கீழ் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியாகவும் விதிக்கப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு
கடந்த வாரம், அமெரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம், டிரம்ப்பின் பல வரிகள் சட்டவிரோதமானவை எனத் தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் முறையிட அக்டோபர் நடுப்பகுதி வரை அவகாசம் வழங்கியது. இந்த வரிகளை ரத்து செய்வது மிகவும் ஆபத்தானது என்றும் இராஜதந்திர அவமானம் ஏற்படும் என்றும் அமெரிக்க கருவூல செயலர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்திருந்தார்.
இந்தத் தீர்ப்பை கண்டித்த டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில், "மேல்முறையீட்டு நீதிமன்றம் எங்கள் வரிகளை நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளது தவறு. ஆனால், இறுதியில் அமெரிக்காதான் வெற்றிபெறும் என்பதை அவர்கள் அறிவார்கள்" என்று பதிவிட்டிருந்தார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் இதை எதிர்த்துப் போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதிகார வரம்பை மீறியதாக குற்றச்சாட்டு
IEEPA சட்டத்தின் கீழ், தேசிய அவசரநிலையை எதிர்கொள்ளும் விதமாக முடிவுகளை எடுக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், வர்த்தக வரிகளை விதிக்கும் அதிகாரம் இந்த சட்டத்தின் கீழ் இல்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.