நொய்டாவில் ஒரு பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, நிர்வாணப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்டாவில் ஒரு பெண்மணியை கத்தியைக் காட்டி மிரட்டி, நிர்வாணப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்ததோடு, அதை வைத்து பல மாதங்களாக மிரட்டி வந்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக காவல்துறைக்கு அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, ஜூலை மாதம் முதல் பாதிக்கப்பட்ட பெண் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு, பால் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விநியோகம் செய்யும் பணியைச் செய்துவந்தவர் கௌரவ் (23) என்ற இளைஞர்.
குழந்தைகளை வைத்து மிரட்டல்
ஜூலை 10 அன்று, கௌரவ், பாதிக்கப்பட்ட பெண்மணியின் வீட்டிற்கு வந்து பேச வேண்டும் என்று கூறி உள்ளே நுழைந்துள்ளார். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணின் மகனின் கழுத்தில் வைத்து, மிரட்டியதாக கூறப்படுகிறது.
"நான் மறுத்தபோது, என் குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டினார். என் மகளை சாக்கடையில் வீசி விடுவேன் என்றார். அவர்களின் உயிருக்கு பயந்து நான் அவர் சொன்னபடி செய்தேன்," என பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
கத்தியைக் காட்டி மிரட்டி, அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி, அதனை வீடியோ மற்றும் புகைப்படங்களாக கௌரவ் பதிவு செய்துள்ளார். அதன் பிறகு, அந்த ஆபாச காட்சிகளை வைத்து அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த மிரட்டல் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தது.
சிக்கியது எப்படி?
அகமதாபாத்தில் பணிபுரியும் அப்பெண்ணின் கணவருக்கு சில தனிப்பட்ட படங்களை கௌரவ் அனுப்பியதோடு, சில படங்களை இணையத்திலும் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி, அதிகாலை 6 மணியளவில் கௌரவ் அப்பெண்ணின் வீட்டிற்கு மீண்டும் வந்து மிரட்டியிருக்கிறார். அப்போது அந்தப் பெண் தைரியமாக காவல்துறை அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளித்தார்.
சூரஜ்பூர் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோது, கௌரவ் தப்பி ஓடியுள்ளார். ஆனால், பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கௌரவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
