உத்தரப் பிரதேசத்தில் வேலை தேடி வந்த நேபாளப் பெண் ஒருவர், திருடன் எனச் சந்தேகிக்கப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டார். மொட்டை மாடியில் இருந்து குதித்த அவரை, கும்பல் உருட்டுக்கட்டைகளால் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வேலை தேடி வந்த நேபாளப் பெண் ஒருவர், திருட வந்ததாக சந்தேகிக்கப்பட்டு ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் போக்காரா மாவட்டத்தைச் சேர்ந்த சுஷ்மிதா சரு மகர் என்ற அந்தப் பெண், பரேலியில் உள்ள பராதரி பகுதியில் வசிக்கும் வினய் கங்வார் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். சனிக்கிழமை இரவு சுமார் 1 மணியளவில், அவர் மொட்டை மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் அவரைத் திருடன் எனத் தவறாக எண்ணியுள்ளனர்.
அவர்கள் கூச்சலிட்டதால் பயந்துபோன சுஷ்மிதா, மொட்டை மாடி கதவைத் திறக்க முயன்றார். ஆனால், அது முடியாமல் போகவே, பயத்தில் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். கீழே விழுந்த அவரை, அங்கிருந்த கும்பல் உருட்டுக்கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அப்பெண் கைகூப்பி, “நான் திருடவில்லை... நான் திருடவில்லை”என்று பல முறை கெஞ்சியும் கும்பல் அவரைத் தொடர்ந்து தாக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் மனுஷ் பாரிக் கூறுகையில், "சமூக வலைதளங்களில் பரவிய காணொளி மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், கௌரவ் சக்சேனா, ஷிவம் சக்சேனா, அமன் சக்சேனா மற்றும் அருண் சைனி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தாக்குதலில் தனது இரண்டு பற்கள் உடைந்ததாகவும், காலில் காயம் ஏற்பட்டதாகவும் அப்பெண் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். வேலை இழந்ததால், புதிய வேலை தேடி பரேலிக்கு வந்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உறுதி அளித்துள்ளது.
