இன்றைய TOP 10 செய்திகள்: விஜய் சவால் முதல் அரசின் விளக்கம் வரை
ஸ்டாலினுக்கு விஜய் நேரடி சவால், திமுக மீது அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி விமர்சனம், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு, சென்னையில் கோர விபத்து, பீகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் இடம்பெற்றுள்ளன.

பகிரங்கமாக சவால் விட்ட விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வரும் நிலையில், விஜய் முதல்முறையாக வீடியோ வெளியிட்டுப் பேசியுள்ளார்.
அப்போது, வழக்குப் பதிவுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அவர், பழிவாங்கும் வேண்டும் என்று கருதினால் தன்னைப் பழிவாங்கும்படி முதலமைச்சருக்கு நேரடியாக சவால் விடுத்திருக்கிறார்.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கோர விபத்து!
சென்னை எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் மத்திய அரசின் பெல் (BHEL) நிறுவனம் சார்பில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது.
ஆதவ் அர்ஜுனா மீது பாய்ந்த வழக்கு
தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அது குறித்து எக்ஸ் தளத்தில் ஆதவ் அர்ஜுனா போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையானது. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் எதிராக அமைந்த எந்த ட்வீட் தொடர்பாகத்தான் ஆதவ் அர்ஜுனா மீது இப்போது வழக்கு போடப்பட்டுள்ளது.
கையாலாகாத திமுக
திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். கையாலாகாத திமுக அரசால், தமிழகப் பெண்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படும் சூழல் உருவாகியிருக்கிறது எனவும் சாடியுள்ளார்.
சீர்குலைந்த ஸ்டாலின் அரசு
மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது, வருவாய் துறை செயலாளர் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் என்ன என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் முற்றிலும் சீர்குலைந்து விட்டது எனவும் விமர்சித்துள்ளார்.
அனுராக் தாக்கூர் சரமாரி கேள்வி
கரூரில் கூட்ட நெரிசல் மரணங்களுக்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். உளவுத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் என்ன செய்துகொண்டு இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கரூர் சென்றுள்ள பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
வளர்த்த மயில்களை தானே கொன்று தின்ற நபர்!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், பக்கத்து வீட்டுக்காரர் மீதுள்ள பகையின் காரணமாக, செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்ட மயில்களைக் கொன்று, சமைத்துச் சாப்பிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரெய்க் வோக்ட் (61) என்ற நபர், தனது பக்கத்து வீட்டுக்காரர் தொடர்ந்து மயில்களுக்கு உணவு அளிப்பதைத் தடுக்கவே இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு மயில்களைக் கொன்று சமைத்துச் சாப்பிட்டது குறித்து தனது பக்கத்து வீட்டுக்காரரின் தபால் பெட்டியில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
தவெக புகார்களுக்கு தமிழக அரசு பதில்
கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, தமிழ்நாட்டுக் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முன்வைத்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு இன்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான திருமதி. அமுதா அவர்கள் இந்தக் விளக்கத்தை அளித்தார்.
பீகாரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சிறப்புத் திருத்தத்தின் கீழ், சுமார் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடியாக இறுதி செய்யப்பட்டுள்ளது.
கனமழைக்கு நாள் குறித்த வானிலை மையம்
தென்னிந்தியப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும். இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.