பெங்களூருவில், துபாயிலிருந்து திரும்பிய கணவர், சந்தேகத்தின் பேரில் தனது நர்ஸ் மனைவியை கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்சு (27). இவர் பெங்களூருவில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் தர்மசீலன் ரமேஷ் (29), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்தத் தம்பதியினர் செப்டம்பர் 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. திருமணத்திற்குப் பின் ஒரு வருடம் தமிழகத்தில் இருந்தனர். பிறகு தர்மசீலன் வேலைக்காக துபாய்க்குச் சென்றார். மஞ்சு பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்து, தனது பெற்றோருடன் தங்கி மருத்துவமனையில் நர்ஸ் பணியைத் தொடர்ந்தார்.

திரும்பி வந்த தர்மசீலன்

தர்மசீலன் ரமேஷ் ஒரு மாதத்திற்கு முன் துபாயிலிருந்து திரும்பினார். மஞ்சுவுடன் 2 வாரங்கள் தமிழகத்தில் இருந்தார். பிறகு, மஞ்சு தனது வேலையைத் தொடர பெங்களூரு திரும்பினார். மஞ்சு பெங்களூருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தந்தை பெரியசாமியுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று, தர்மசீலன், பெரியசாமியைத் தொடர்பு கொண்டு, பெங்களூருவில் மஞ்சுவுடன் நிரந்தரமாகத் தங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். பின் சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணியளவில் பெரியசாமி வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டார். அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரிடம் இருந்து மாற்றுச் சாவியைப் பெற்றுக் கதவைத் திறந்தார். இரவு 9:30 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்தபோது, அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை அளித்தது.

அதிர்ச்சி அளித்த காட்சி

படுக்கையில், மஞ்சுவின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. கழுத்திலும் உடலிலும் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்தன. சுமார் 45 காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு அருகிலேயே தர்மசீலன் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இக்கொடூரம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தர்மசீலன், மஞ்சுவின் கழுத்தை அறுத்து, அவர் உடல் முழுவதும் திரும்பத் திரும்பக் கத்தியால் குத்தியுள்ளார். அவர் இறந்த பின்னரும் சிலமுறை குத்தியிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

மஞ்சு, மருத்துவமனையில் உடன் பணிபுரியும் ஆண்களுடன் பேசுவதைக் குறித்து தர்மசீலன் சந்தேகப்பட்டு வந்துள்ளார் என்றும், இதுவே இந்தக் கொடூரச் செயரலுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.