கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர், மனைவி பிரிந்து சென்றதால் வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.மனைவி பிரிந்து சென்ற நிலையில், அவரை வரவழைக்க முயன்று முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கோவையில் ஒருவர் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிந்து சென்ற மனைவி
கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஜெயபால் (47). இவர் மனைவி வாலண்டினா (40) மற்றும் மகனுடன் வசித்து வந்தார். ஜெயபால் மதுவுக்கு அடிமையானதால், வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
இதனால் சமீபத்தில் வாலண்டினா தனது மகனுடன் கணவரைப் பிரிந்து, கோவையில் இருந்து மதுரைக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, ஜெயபால் தனது மனைவிக்கு வீடியோ கால் செய்து, உடனடியாக வீட்டுக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
மனைவி கண் முன்னே விபரீதம்
வாலண்டினா வரமுடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். எத்தனை முறை சொல்லியும் மனைவி தான் சொன்னதைக் கேட்காத நிலையில், ஜெயபால் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
உடனே சுதாரித்துக்கொண்ட வாலண்டினா, கோவையில் உள்ள அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் ஜெயபால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
பீளமேடு காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஜெயபால் அடிக்கடி தொலைபேசியில், "தற்கொலை செய்து கொள்வேன்" என்று மனைவியைத் தொடர்ந்து மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது.
