இன்றைய TOP 10 செய்திகள்: தவெக தலைவர் கைது முதல் டிரம்பின் 100% வரி வரை!
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து, அக்கட்சியின் முக்கிய தலைவர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தவிர, டெல்லியில் பாஜக அலுவலகம் திறப்பு, சீனாவில் உலகின் உயரமான பாலம் திறப்பு உள்பட இன்றைய TOP 10 செய்திகள்.

தவெக முக்கிய தலைவர் அதிரடி கைது!
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்ட நெரிசல் நடந்த உடன் மதியழகன் தலைமறைவாக சென்று விட்டார். இவர் தான் கரூரில் விஜய் பிரசாரத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தார்.
விஜய்க்கு கை கொடுத்த ஸ்டாலின்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் ஏற்பட்டநெரிசல் காரணமாக 41 பேர் முச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து சமூக வலைதளங்களில் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்தும், காவல்துறையை விமர்சித்தும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்தும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ மூலம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நள்ளிரவுக்குள் கைதாகும் புஸ்ஸி ஆனந்த்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நள்ளிரவுக்குள் காவல்துறை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் நிர்மலா சீதாராமன்
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகனும் உடன் இருந்தார்.
"உயிரிழந்தவர்கள் குடும்பத்தைச் சந்தித்தேன். அவங்க பேசுறதைக் கேட்டாலே, என்னால பேசக் கூட முடியல. ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஏழைகள். இனி இதுபோல சம்பவம் நடக்கக் கூடாது." என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.
தவெகவினர் 2 பேர் கைது
கரூர் கூட்ட நெரிசல் குறித்து அவதூறு வீடியோ பரப்பிய தவெகவினர் 2 பேர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த மோடி!
தலைநகர் டெல்லியில் தீன் தயாள் உபாத்யாயா மார்க்கில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள டெல்லி பாஜக அலுவலகத்தை இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுகள் நாட்டில் ஒரு புதிய நல்லாட்சி மாதிரியை வழங்கியுள்ளதாகவும், அது வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற தாரக மந்திரத்துடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
டிரம்ப் தடாலடி அறிவிப்பு
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மீது 100% வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதேபோன்ற வரி வெளிநாட்டு தளவாடப் பொருட்கள் மீதும் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ் காட்டும் சீனாவின் உயரமான பாலம்!
உலகிலேயே மிக உயரமான பாலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள சீனாவின் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஒன்றான குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கின் மேல் 625 மீட்டர் (சுமார் 2,051 அடி) உயரத்தில் இந்த அற்புத பாலம் வானுயர எழுந்து நிற்கிறது.
இந்த பிரம்மாண்டமான பாலம் குயிசூ மாகாணத்தின் இரண்டு பக்கங்களுக்கு இடையேயான பயண நேரத்தை முற்றிலும் குறைத்துள்ளது. முன்னர் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்ட ஒரு பயணம், தற்போது இரண்டே நிமிடங்களில் கடக்கப்படுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கார் பந்தயத்தில் 10 வயது சிறுமியின் சாதனை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற RMC இன்விடேஷனல் கார்ட்டிங் கார் பந்தைய இறுதிப் போட்டியில், இளம் இந்திய ரேஸரான ஆதிகா மிர் (10), மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
போட்டியின் இறுதிச் சுற்றில், எட்டாவது இடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கிய ஆதிகா, அபாரமான வேகத்தைக் காட்டினார். அவர் இரண்டே லேப்களுக்குள் ஐந்து கார்களைப் பின்னுக்குத் தள்ளி, இறுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து போடியத்தில் ஏறி சாதனை படைத்தார்.
பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
Asia Cup 2025: இந்தியா கோப்பையை மறுத்த நிலையில், ஆசிய கோப்பையுடன் தப்பி சென்ற பாகிஸ்தான் அமைச்சர் மீது ஐசிசியிடம் புகார் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்த போதிலும், அவர் மேடையை விட்டு இறங்காததால், நக்விக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யப் போவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.