ஷிரிஷ் சந்திர முர்மு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய துணை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணை ஆளுநர் ராஜேஸ்வர் ராவ் ஓய்வு பெறுவதையடுத்து, முர்மு மூன்று ஆண்டு காலத்திற்கு இந்தப் பதவியை வகிப்பார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டு காலத்திற்கு முர்மு இந்தப் பதவியில் இருப்பார்.

ஷிரிஷ் சந்திர முர்மு

தற்போது ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் (Executive Director) பணியாற்றி வரும் சந்திர முர்முவின் நியமனம், அக்டோபர் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய துணை ஆளுநரான ராஜேஸ்வர் ராவ் அவர்களுக்குப் பதிலாக சந்திர முர்மு பதவியேற்பார். ராஜேஸ்வர் ராவின் பதவிக்காலம் அக்டோபர் 8 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இவர் தற்போது வங்கி ஒழுங்குமுறை மற்றும் இதர துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறார்.

நான்கு துணை ஆளுநர்கள்

ரிசர்வ் வங்கியில் பணவியல் கொள்கை, நிதிச் சந்தை ஒழுங்குமுறைகள், வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட துறைகளைக் கவனிப்பதற்கு நான்கு துணை ஆளுநர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய துணை ஆளுநர் சந்திர முர்முவுக்கு எந்தத் துறைகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.