தெலுங்கானா மாநிலம் ஜக்டியலில், காதல் முறிவைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் குறித்து பதிவிட்ட 28 வயது இளைஞர், அப்பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம் ஜக்டியல் மாவட்டத்தில், ஒரு பெண் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 28 வயது இளைஞர், அப்பெண்ணின் குடும்பத்தினரால் கொடூரமாகத் தாக்கிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, சாரங்கபூர் மண்டலம், ரெச்சாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் எதுருகட்லா சதீஷ் (28). ஓட்டுநரான சதீஷ், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் முன்னர் உறவில் இருந்துள்ளார்.

இன்ஸ்டா பதிவில் மிரட்டல்

சமீபத்தில் அப்பெண்ணுக்கு அவரது குடும்பத்தார் மாப்பிள்ளை தேடத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்தப் பெண் சதீஷிடம் இனி இந்த உறவைத் தொடர விரும்பவில்லை, பிரிந்துவிடலாம் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு மனமுடைந்த சதீஷ், அப்பெண் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "இவளை யாரும் திருமணம் செய்யக் கூடாது" என்று மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

வீடுதேடி வந்து தாக்குதல்

சதீஷின் இந்தப் பதிவு அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், சதீஷின் வீட்டிற்குச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் சதீஷை கம்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என காவல்துறை கூறுகிறது.

ஜக்டியல் ஊரகக் காவல் ஆய்வாளர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "நாத்தாரி வினாஞ்சி, சாந்தா வினாஞ்சி மற்றும் ஜாலா ஆகிய மூன்று பேர் மீது கொலைக் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சதீஷின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்று தெரிவித்தார்.