இன்றைய TOP 10 செய்திகள்: விஜய் வீட்டு மர்மம் முதல் சசிகலா வழக்கு வரை
நடிகர் விஜய் வீட்டில் மர்ம நபர் புகுந்ததால் பரபரப்பு, சென்னை பயணத்திற்கு ஒரே டிக்கெட், முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை அறியலாம்.

விஜய் வீட்டில் மர்ம நபர்
அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய்யின் பாதுகாப்பிற்காக மத்திய அரசு சார்பாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நேற்று மாலை நடிகர் விஜய் தனது வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் சாவகாசமாக மர்ம நபர் அமர்ந்திருந்துள்ளார். மர்ம நபர் விஜய்யை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துள்ளார்.
மரக்கன்று நட்ட மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரப்பூர்வ இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை நட்டார். செப்டம்பர் 17 அன்று தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் இந்த சிறப்புப் பரிசை வழங்கினார்.
பிரதமரின் இல்லத்தில் இந்த மரக்கன்றை நட்டது, ஒரு பசுமையான மற்றும் ஆரோக்கியமான பூமியை உருவாக்கும் அவரது தொலைநோக்கு பார்வையை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்!
'சென்னை ஒன்' என்ற புதிய செயலி மூலம், மாநகரப் பேருந்துகள், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே QR குறியீடு டிக்கெட்டில் பயணிக்கலாம். கும்டா உருவாக்கியுள்ள இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.
மழை குறித்து முக்கிய அப்டேட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பெண்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை
ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசு, பெண்கள் எழுதிய நூல்களைப் பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கியுள்ளது. மேலும், பெண்கள் தொடர்பான பாடத்திட்டங்களை நீக்கி, பல மாகாணங்களில் இணைய சேவையையும் முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது, புதிய கல்வி விதிகளின்படி பெண்கள் எழுதிய நூல்கள் இனி கற்பித்தல் திட்டத்தில் இடம்பெறாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி!
நாமக்கல் ராசிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது ஊழல், வரி உயர்வு, சுகாதாரத் துறை முறைகேடுகள், நீட் தேர்வு மற்றும் போதைப் பொருள் புழக்கம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தடைகளை தகர்ந்து சாதித்த சுரேகா யாதவ்!
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், இந்திய ரயில்வேயில் 36 ஆண்டுகால புகழ்பெற்ற சேவைக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் வந்தே பாரத் உள்ளிட்ட பல ரயில்களை இயக்கி, ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பெற்றோருக்கு கோயில் கட்டி கும்பிடும் தங்க மகன்கள்
பெற்றோரின் உருவச்சிலையை அமைத்து கோயில் கட்டி வழிபட்டு வரும் இரண்டு மகன்களின் செயல் தெலங்கானாவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் காலமான நிலையில், தங்கள் பெற்றோரின் நினைவாக அவர்களின் விவசாய நிலத்திலேயே மகன்கள் இருவரும் ஒரு கோயிலைக் கட்டினர். இந்தக் கோயிலில் பளிங்கு கற்களால் செய்யப்பட்ட பெற்றோரின் உருவச்சிலைகளை வைத்து, தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
தெருநாய் தொல்லைக்கு தீர்வு
ஓசூரில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையைச் சமாளிக்க, மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை வைத்து ஒரு புதிய முறையைக் கையாளுகின்றனர். நாய்களுக்கு நீல நிறம் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.
சசிகலாவை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சென்னை மற்றும் ஹைதராபாத் சொத்துக்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
கனரா வங்கியில் ரூ.200 கோடி மோசடி மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக, சசிகலாவுக்குச் சொந்தமான சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சொத்துக்களில் அமலாக்க இயக்குநரகம் (ED) சோதனை நடத்தியுள்ளது.