இந்திய விமானப் படை தலைவர் ஏ.பி. சிங், நீண்டகாலமாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்களைச் சுட்டிக்காட்டி, போர்களை விரைவாகத் தொடங்கி முடிப்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து உலக நாடுகள் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் போரை எப்படி விரைவாகத் தொடங்கி, விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ ஓர் உதாரணம்
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஏ.பி. சிங், "இன்று நடந்து கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் அல்லது இஸ்ரேல்-ஹமாஸ் போர்கள் ஏன் பல ஆண்டுகளாக நீடிக்கின்றன என்றால், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி யாரும் சிந்திப்பதே இல்லை. ஒரு போரை எப்படி மிகக் குறுகிய காலத்தில் தொடங்கி, முடிவுக்குக் கொண்டுவருவது என்பதை உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதற்கு உதாரணமாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த மே மாதம் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்குள் இரு நாடுகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு வந்தன. இந்தத் தாக்குதலில் இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நீண்டகாலப் போர்களின் பாதிப்புகள்
ரஷ்யா-உக்ரைன் போர் 2022 பிப்ரவரியில் தொடங்கி, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, இரு நாடுகளிலும் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தபோதும், எந்தவிதமான தீர்வையும் எட்ட முடியவில்லை.
இதேபோல், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இடையேயான போரும் கடந்த அக்டோபர் 2023 முதல் நீடித்து வருகிறது. இதற்கு ஈரான் உட்பட பல நாடுகள் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், உடனடியாக அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
இந்த நீண்டகாலப் போர்களைச் சுட்டிக்காட்டிய ஏ.பி. சிங், ஒரு போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதே மக்களின் நலனுக்கு நல்லது என்ற கருத்தை முன்வைத்தார்.


