காசா மீதான இஸ்ரேலின் போருக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் சத்யராஜ், வெற்றி மாறன், அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பேரணி நடந்தது. உலக நாடுகள் இந்த போரை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரால் காசா நகரமே முற்றிலுமாக உருக்குலைந்து மக்கள் வாழத்தகுதியில்லாத நகரமாக மாறி விட்டது. போர் விதிமுறைகளை மீறி பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
மனசாட்சியில்லாத இஸ்ரேல்
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் இருந்தாலும் அங்கும் இஸ்ரேல் கொஞ்சம் கூட மனசாட்சியின்றி தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மை காலமாக காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு உலக நாடுகளும், ஐநா அமைப்பும் காசா மீதான தாக்குதலை நிறுத்தும்படி இஸ்ரேலை வலிறுத்தி வருகின்றன. முதல்வர் ஸ்டாலினும் இந்த போரை நிறுத்தும்படி இந்தியாவுக்கும், உலக நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.
காசா போருக்கு எதிராக சென்னையில் பேரணி
இந்நிலையில், காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பேரணி நடந்தது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் திருமாவளவன், வைகோ, முத்தரசன், வீரமணி, ஜவாஹூருல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கருணாஸ், தீனா, இயக்குனர்கள் வெற்றி மாறன், அமீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆவேசமாக பேசிய சத்யராஜ்
பின்பு பேசிய நடிகர் சத்யராஜ், ''காசாவில் நடக்கும் இனப்படுகொலை பார்க்கவே சகிக்கவில்லை. அப்பாவி பெண்கள், குழந்தைகள் மீது குண்டு வீசி கொல்கிறார்கள். அவர்களுக்கு (இஸ்ரேல்) மனிதாபிமானமே இல்லையா? ஒரு இனத்தில் விடுதலைக்காக போராடும்போது இலங்கையிலும் இதுதான் நடந்தது. மனிதநேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால், நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து ஒரு பயனும் இல்லை. இது இஸ்லாமிய சகோதர்களுக்கு ஆதரவான கூட்டம் இல்லை. மனிதநேயத்துக்கு ஆதரவாக நடக்கும் கூட்டம். காசா போரை உலக நாடுகள், ஐநா அமைப்பு தடுத்து நிறுத்த வேண்டும்'' என்றார்.
வெற்றி மாறன் பேசியது என்ன?
இதனைத் தொடர்ந்து பேசிய வெற்றி மாறன், ''பாலஸ்தீனத்தில் நடந்து வருவது திட்டமிட்ட இனப்படுகொலை ஆகும். பள்ளிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசுகின்றனர். அவர்களுக்கு ஆதாரமாக இருக்கும் ஆலிவ் மரங்களையும் அழிக்கிறார்கள். ஐந்தில் ஒருவர் பசியால் இறப்பதும், ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து இல்லாமல் இறப்பதும் என காசா பஞ்ச பகுதியாக மாறி விட்டது. இந்த இனப்படுகொலையை கண்டிப்பது நம் அனைவரின் கடைமையாகும்'' என்று தெரிவித்தார்.
இதுதான் தமிழ்நாடு; அமீரின் அனல் பறக்கும் பேச்சு
மேலும் உரையாற்றிய அமீர், ''இஸ்ரேல் அரசு 63,000 படுகொலையை அரங்கேற்றி இருக்கிறது. அதை அமெரிக்க அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்திய மோடி அரசு அதனுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து இந்தியாவிலேயே இப்படி ஒரு கூட்டம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இதுதான் தமிழ்நாடு. இதைத் தான் வடநாட்டு கும்பல் அழிக்க நினைக்கிறது. காசாவுக்கு நீங்கள் ஏன் குரல் கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாங்கள் மதத்திற்காக குரல் கொடுக்கவில்லை. மனிதநேயத்துக்காக குரல் கொடுக்கிறோம்'' என்று கூறினார்.
