- Home
- Tamil Nadu News
- அப்பாடி! எத்தனை கோரிக்கை! அத்தனையும் தமிழக விவசாயிகளுக்காக! அமைச்சர் சொன்ன "குட்" நியூஸ்
அப்பாடி! எத்தனை கோரிக்கை! அத்தனையும் தமிழக விவசாயிகளுக்காக! அமைச்சர் சொன்ன "குட்" நியூஸ்
தமிழகத்தில் மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், மாம்பழ கூழ் மீதான 12% ஜி.எஸ்.டி. வரியை 5% ஆக குறைக்கவும், மத்திய அரசு பாதி விலையை ஈடுகட்டவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மாம்பழ கூழ் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை
மா விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை தமிழ்நாடு அமைச்சர் சக்கரபாணி சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் நகலை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தமிழ்நாடு அமைச்சர் சக்கரபாணி வழங்கிய போது நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழ்நாட்டில் மாம்பழம் உற்பத்தி கடந்த ஆண்டை விட 3 மடங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும் மாம்பழ விலை வீழ்ச்சியை ஈடுகட்டும் வகையிலும் மத்திய அரசு பாதி விலையை ஈடுகட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
"விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்"
மத்திய அமைச்சர்களிடம் விவசாயிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தமிழகம் சார்பில் வைக்கப்பட்டதாகவும் அவை விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பயன் அளிக்கும் என்றும் தமிழக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
"எல்லா கோரிக்கையும் விவசாயிகளுக்காகவே"
மாம்பழ கூழ் மீதான 12% ஜி.எஸ்.டி.வரியை 5 சதவிதமாக குறைக்க வேண்டும் என்றும், நெல்லுக்கான ஆதார விலையை அதிகரித்து வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடன் கோரிக்கை வைத்ததாக கூறிய அமைச்சர் சக்கரபாணி, குறுவை பருவத்தில் நெல் கொள்முதலை 19 லட்சம் டன்னாக உயர்த்த கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
"எங்களுக்கு வேண்டியதை கொடுங்கப்பா"
பாசிப்பயிறு கொள்முதல் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும், தமிழகத்திற்கு வழங்கும் கோதுமை அளவை 25 ஆயிரம் டன்னாக அதிகரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தமிழக அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழ்நாட்டிற்கு பொது விநியோகத்துறைக்கு வழங்க வேண்டிய 2,670.64 கோடி ரூபாய் நிலுவை நிதியை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது.