- Home
- Tamil Nadu News
- மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Tamil Nadu TASMAC Closure: தமிழகத்தில் பிப்ரவரி 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

வசூலில் கொடிகட்டி பறக்கும் டாஸ்மாக்
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இந்த பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் அதிகமாக உள்ளது.
பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்
இந்த நிலையில், குடிமகன்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
இதுதான் காரணம்
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு இல்லை
ஏற்கெனவே இதே கோரிக்கைகளை முன்வைத்து ஏ.ஐ.டி.சி, சி.ஐ.டி.யூ போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து இதனை வலுப்படுத்தியுள்ளன. முதலில் பிப்ரவரி 17ம் தேதி (நாளை) முதல் கடையடைப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து இருந்த நிலையில், இப்போது கடையடைப்பு போராட்டத்தை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஆகையால் நாளை இரவு முதல் கடைகளை அடைத்தபின்பு சாவிகளை ஒப்படைத்து விட்டு போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர் சங்கங்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தையும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

