நேற்று பாமக! இன்று தாவக நிர்வாகி பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி! அலறும் தமிழகம்!
Tamizhaga Vaazhvurimai Katchi leader Murder: செங்கல்பட்டில் பாமக பிரமுகர் வாசுவும், கிருஷ்ணகிரியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர் ரவிசங்கரும் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

பாமக வாசு
செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வாசு. பாமகவில் செங்கல்பட்டு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். மேலும், காட்டாங்குளத்தூர் ஒன்றிய சேர்மனாக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். மேலும் தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிங் சேவைகளை வழங்குவது, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்து வந்துள்ளார்.
வெட்டி கொலை
இந்நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து இளந்தோப்பு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்நிலையில் இன்று தாவக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் சொங்கோடசிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கர் (37). இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருந்து வருகிறார். மேலும், இவர் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்தார். இந்நிலையில், ரவிசங்கர் இன்று அஞ்சாலம் கிராமத்தில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ரவி சங்கர் கொலை
இதனால் அதிர்ச்சியடைந்த ரவி சங்கர் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவிசங்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவி சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குற்றவாளி கைது
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவி சங்கரை கொலை செய்த பருவிதி பகுதியை சேர்ந்த ஆதி, உல்லட்டி கிராமத்தை சேர்ந்த ரக்ஷித் ஆகிய 2 பேரை கைது செய்து வருகின்றனர். பட்டப்பகலில் தாவக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.