மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு ரூ.2,500 எப்போது? விஜய் அரசு குட்நியூஸ்!
Magalir Urimai Thogai: தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். விஜய் அரசு சொன்ன குட்நியூஸ் குறித்து பார்ப்போம்.

மகளிர் உரிமைத் தொகை
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' செயல்படுத்தப்பட்டு வந்தது. தேர்தல் களத்தில் இந்த தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் எதிர்பாராத அரசியல் மாற்றங்களால் நடிகர் விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.
ரூ.2,500 எப்போது கிடைக்கும்? பெண்கள் எதிர்பார்ப்பு
தவெக தனது தேர்தல் அறிக்கையில், இத்திட்டத்தை 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்ற பெயரில் மாற்றி, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. புதிய அரசு பொறுப்பேற்றதும் ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்று பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் தவெக அரசு ஆயிரம் ரூபாயை மட்டுமே பெண்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
விஜய் ஆட்சியில் மகளிர் உரிமைத் திட்டம் மறுசீரமைப்பு
இதற்கிடையே தவெக அரசு மகளிர் உரிமைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்வதாக தகவல் வெளியாகி இருந்தது. அதாவது கடந்த ஆட்சியில், சொந்தமாகப் பல வீடுகள் வைத்திருப்பவர்கள் மற்றும் வசதி படைத்த சிலரும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நிதியைப் பெற்று வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தகுதியற்றவர்களைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, உண்மையாகவே வறுமையில் உள்ள தகுதியான பெண்களை கூடுதலாகச் சேர்க்கும் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி, ரூ.2,500 வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்!: https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-govt-mega-update-auto-patta-transfer-rules-changed-for-property-buyers-opnfxml
பெண்களுக்கு விரைவில் ரூ.2,500 வழங்கப்படும்
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் பெண்களுக்கு வழங்கப்படும் என்று தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி மகிழ்ச்சி செய்தியை சொல்லியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ''தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான அனைத்து வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இந்த உயர்த்தப்பட்ட தொகை பெண்களுக்குக் கிடைக்கும்.
தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி அப்டேட்
கடந்த ஆட்சியில் விண்ணப்பித்தும் பணம் கிடைக்காத பல பெண்களிடம் இருந்து எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. மேலும், ஒரே பெயரில் 2 முதல் 3 முறை விண்ணப்பிக்கப்பட்ட குளறுபடிகளும், ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகளை வைத்துக் கொண்டு இரண்டு பெண்கள் பணம் வாங்குவதையும் அரசு கண்டுபிடித்துள்ளது. இவை அனைத்தையும் சரிசெய்து, தகுதியான ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்தத் திட்டம் முறையாகச் சென்றடைய அரசு விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அதுவரை சற்று பொறுமை காக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்: https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/ration-card-alert-update-your-mobile-number-before-july-5-or-lose-benefits-mmgfy0e

