- Home
- Tamil Nadu News
- Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
Ration Card Update: ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஜூலை 5 ஆம் தேதிக்குள் மொபைல் எண் சரிபார்ப்பு பணியை முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை செய்ய தவறினால் ரேஷன் பொருள் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ரேஷன் கடைகள்
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யபட்டு வருகின்றன. அதிலும் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதரமாக உள்ளது. இதேபோல் மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை பெற்ற குடும்பங்கள் (PHH) ஆகிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு, நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது இந்த திட்டத்தில் மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றம் ஒன்றை அரசு கொண்டு வரவுள்ளது. இதன் காரணமாக பயனாளிகள் சில அவசர பணிகளைச் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷனில் டிஜிட்டல் வாலட் முறை
PMGKAY திட்டத்தின் புதிய விதிமுறைகளின்படி, வரும் ஆகஸ்ட் 2026 முதல் ரேஷன் மானியத் தொகை நேரடியாக 'டிஜிட்டல் நாணயம்' (CBDC - Central Bank Digital Currency) வடிவில் வழங்கப்பட உள்ளது. பயனாளிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணைக் கொண்டு ஒரு பிரத்யேக 'டிஜிட்டல் வாலட்' (Digital Wallet) உருவாக்கப்படும்.
மத்திய அரசு வழங்கும் ரேஷன் மானியத் தொகை இந்த வாலட்டில்தான் டிஜிட்டல் நாணயமாக வரவு வைக்கப்படும். இந்த வாலட் தொகையைக் கொண்டு, பயனாளிகள் அரசு அங்கீகரித்துள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களுக்குத் தேவையான உணவுத் தானியங்களை பெற்றுக்கொள்ளலாம் என குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 5-க்குள் மொபைல் எண் சரிபார்ப்பு கட்டாயம்
இந்த புதிய டிஜிட்டல் நாணய முறை தடையின்றி செயல்பட, பயனாளிகளின் மொபைல் எண் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, உங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம். வரும் ஜூலை 5 ஆம் தேதிக்குள் இந்த சரிபார்ப்புப் பணியை முடிக்க வேண்டும்.
மொபைல் எண்ணில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருந்தால், உடனடியாக உங்கள் பகுதிக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைக்கு (Ration Shop) சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். வேலை நாட்களில், நியாயவிலைக் கடை இயங்கும் நேரங்களில் சென்று இத்திருத்தங்களைச் செய்யலாம். திருத்தம் வெற்றிகரமாக முடிந்ததும் பயனாளியின் மொபைலுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும்.
ரேஷன் கடைக்கு செல்லும்போது இது முக்கியம்
பயனாளிகள் மொபைல் எண் சரிபார்ப்பு அல்லது திருத்தத்திற்காக நியாயவிலைக் கடைகளுக்குச் செல்லும்போது, தங்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட எண் கொண்ட மொபைல் போனை தவறாமல் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இந்த மொபைல் எண் சரிபார்ப்பை முடிக்கத் தவறினால், வரும் காலங்களில் ரேஷன் மானியத் தொகை மற்றும் இலவச உணவு தானியங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தகுதியுள்ள PMGKAY பயனாளிகள் அனைவரும் ஜூலை 5-க்குள் இந்தச் சரிபார்ப்பை முடித்து, தடையற்ற மானியத்தைப் பெறத் தயாராகுங்கள்.

