- Home
- Tamil Nadu News
- பெண்களுக்கு குஷியோ குஷி.! கிரைண்டர் வாங்க 5ஆயிரம் ரூபாய்.! உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
பெண்களுக்கு குஷியோ குஷி.! கிரைண்டர் வாங்க 5ஆயிரம் ரூபாய்.! உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
தமிழக அரசு மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க ரூ.5,000 மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. கைம்பெண்கள், ஆதரவற்றோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்
தமிழகத்தில் மகளிர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும், யாரையும் எதிர்பார்த்து இருக்க கூடாது என்பதற்காக ஒவ்வொரு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி, மகளிர் உரிமை தொகையான மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு பெரிய அளவில் பயனாக உள்ளது. சிறிய அளவிலான பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் யாரையாவது எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலையில் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கிடைப்பதால் சொந்தமாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.
மேலும் பெண்களுக்காக பிங்க் ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. சொந்த தொழில் செய்ய மானிய கடன் உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கான மானியத் தொகையினை பெற விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர். கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும். பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
2025-2026 ஆம் நிதியாண்டிற்காக, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 10,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000/-மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் மானியம்- விண்ணப்பிப்பது எப்படி.?
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ( பிறப்பிடச் சான்று). வயது வரம்பு 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று மர்றும் திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாச்சியரிடம் பெறுதல் வேண்டும் ) போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ. 1.20 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாச்சியிரிடமிருந்து பெறுதல் வேண்டும்)
கிரைண்டர் வாங்க மானியம்- விண்ணப்பிக்க கடைசி நாள்
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மகளிர் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர். சிங்கார வேலனார் மாளிகை, 8 வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவகத்தில் 14.07.2025-ற்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.