கர்நாடகாவுக்குப் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினி! தேவா வருகையால் ஆடிப்போன பெங்களூரு!!
ரஜினிகாந்தின் 171வது படமான கூலி இன்று வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இது ரஜினியின் 171வது திரைப்படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அமீர்கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்திற்கு வழக்கம் போல அனிருத் மாஸ் காட்டியுள்ளார். இப்படத்தின் முதல் ஷோ தமிழ்நாட்டில் 9 மணிக்கு ரிலீஸ் ஆனது. அதற்கு முன்னதாக வெளிநாடுகளில் கூலி படம் ரிலீஸ் ஆகிவிட்டது. வெளிநாட்டில் கூலி படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் திரைத்துரையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை எட்டிய நிலையில் அதனை கொண்டாடும் வகையில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் என அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி உலக முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் தற்போது சென்னையில் இல்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று நேற்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்து எளிமையாக, பசவனகுடியில் உள்ள ராமகிருஷ்ணா ஆசிரமத்திற்கு சென்றார். அவரை ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் மடத்தில் சாமி தரிசனம் செய்தார். அத்துடன் சிறிது நேரம் தியானம் செய்தார்.
ரஜினிகாந்த் வந்தது பற்றி தகவல் அறிந்ததும் குழந்தைகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு கூடியது மட்டுமல்லாமல் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.