- Home
- Tamil Nadu News
- மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.! இன்று முதல் விடைத்தாள் நகலை பெறலாம்- எப்படி தெரியுமா.?
மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.! இன்று முதல் விடைத்தாள் நகலை பெறலாம்- எப்படி தெரியுமா.?
தமிழ்நாடு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகலை இன்று (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் சுமார் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.மொத்தம் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது இந்த ஆண்டு 93.80% தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
சுமார் 6 சதவிகிம் பேர் தோல்வி அடைந்தனர். இதனையடுத்து 10 மற்றும் 11 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
விடைத்தாள் நகலை பெற விண்ணப்பிக்கலாம்
அந்த வகையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள்களின் நகலினை இணையதளத்தில் இன்று (ஜூன் 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று (13.06.2025 வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் 17.06.2025 (செவ்வாய்கிழமை) வரை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு கூட்டல் - மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
10ஆம் வகுப்பு விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க மாணவர்கள் விரும்பினால், www.dge.tn.gov.in இணையதள முகவரியில் "Application for Retotalling/ Revaluation" என்ற தலைப்பினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் விண்ணப்பிப்பது எப்படி.?
10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் நகலை பெற மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு , Notification-ஐ க்ளிக் செய்தவுடன் "SSLC, March/April 2025 - Scripts Download" என்ற தகவல் இடம்பெற்று இருக்கும். இதனை
Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது 10ஆம் வகுப்பு தேர்வு பதிவெண் மற்றும் மாணவரின் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மறு கூட்டலுக்கு கட்டணம் என்ன.?
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 16.06.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல் 18.06.2025 (புதன்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-
மறுகூட்டல்
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-