School Student: தப்பி தவறி கூட அசால்டா இருந்திடாதீங்க! மாணவர்களுக்கு எது நடந்தாலும் நீங்க தான் பொறுப்பு!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதாவது தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் வாயிலாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: School Education Department: அக்டோபர் 25-ம் தேதி வரை தான் கெடு! தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத் துறை உத்தரவு!
அதனைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பருவமழையின் போது பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் பழைய கட்டடங்களைப் பொதுப்பணித்துறை மூலம் அகற்றும் பணி காலாண்டுத் தேர்வு விடுமுறையின் பொது தொடங்கப்பட்டது. அப்பணிகளை விரைவுபடுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பழைய மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பியுள்ள இடங்களுக்கு மாணவர்கள் செல்லாமல் இருக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகுந்த பாதுகாப்பு அறிவுரைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Anbumani: ரெட் அலர்ட் கொடுத்தீங்க! ஒரு சொட்டு மழைக்கூட பெய்யல! வானிலை மையத்தை மீண்டும் சீண்டும் அன்புமணி!
மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில், பள்ளிக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும் பள்ளிக்கல்வித் துறையினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாகக் காண்காணிக்க வேண்டுமெனவும் எல்லா வகையிலும் பள்ளியின் பாதுகாப்பையும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளியைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.