- Home
- Tamil Nadu News
- ஒரு மேயரை தேர்வு செய்ய துப்பில்ல.. பேசாம கலைச்சிட்டு போயிடுங்க.. திமுக அரசை பொளந்து கட்டிய செல்லூர் ராஜூ
ஒரு மேயரை தேர்வு செய்ய துப்பில்ல.. பேசாம கலைச்சிட்டு போயிடுங்க.. திமுக அரசை பொளந்து கட்டிய செல்லூர் ராஜூ
இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கு மேயரைத் தேர்ந்து எடுக்க துப்பு இல்லாத கட்சி திமுக என்று விமர்சித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

அதிமுக.வில் குவியும் இளைஞர்கள்
மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், காமராஜர் சாலை பகுதியில் நடைபெற்ற அதிமுக 54 ம் ஆண்டு தொடக்க விழாப் பொதுக் கூட்டத்தில் அதன் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “3ம் தலைமுறை அதிமுகவில் தலை எடுத்து இருக்கிறது. மற்ற கட்சியில் வயதானவர்கள் தான் இருக்கிறார்கள். 54 ஆண்டு ஆகியும், இந்த கட்சிக்கு இளைஞர்கள் புதிது புதிதாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவின் 3வது பெரிய கட்சி
31 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், சாமானியர்களுக்கும், பட்டியல் இனத்தவர்க்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த கட்சி அதிமுக. மகளிர்க்கும் சம உரிமை கொடுத்து, திறமைக்கேற்ப பதவிக் கொடுத்து அழகு பார்த்த கட்சி அதிமுக. ஒரு இயக்கத்திலிருந்து இன்னொரு இயக்கம் பிரிவது சகஜம். ஆனால் திமுகவில் பிரிந்த அதிமுக, இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக இருக்கிறது. எம்ஜிஆர் 3 முறை தொடர்ந்து வெற்றிப் பெற்று, தமிழகத்தை ஆட்சி செய்தார். நடிகர் கட்சி என்று விமர்சித்தவர்களின் எண்ணங்களை தவிடு பொடியாக்கியவர் எம் ஜி ஆர்.
படிப்படியாக அரசியலில் உயர்ந்து ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்து நாலரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியைத் தந்தவர் எடப்பாடியர். குடிமராமத்து திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்தவர் எடப்பாடி. கொரானோ காலத்தில் கூட உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது அதிமுக ஆட்சி. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக ஆட்சி.
ராஜினாமா செய்த மதுரை மேயர்
அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஓராண்டு போராடி, 200 கோடி மாநகராட்சி வரி வசூல் ஊழலை வெளிக் கொண்டு வந்தோம். கல்யாண மண்டபங்களுக்கும், வீடுகளுக்கான சொத்து வரியை விதித்து ஊழல் செய்தது திமுக. இன்று ஊழல் வழக்கில் மேயர் ராஜினாமா வரை சென்றுள்ள அவலம் மதுரை மாநகராட்சியில் நடந்து இருக்கிறது. அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததன் விளைவாக, நீதியரசர் உத்தரவால் மாநகராட்சி ஊழல் வெளி வந்து, மேயர் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகராட்சியை கலைத்து விடுங்கள்
மேயர் ராஜினமா செய்து இரண்டு வாரமாகியும் மதுரையில் புது மேயரை நியமிக்க இயலாமல் திணறுகிறது திமுக. 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர் ராஜினமா செய்து 2 மாதங்களாகி விட்டது. 69 திமுக கவுன்சிலர்கள் இருந்தும், திமுகவால் ஒரு மேயரைத் தேர்ந்து எடுக்க முடியவில்லை. இரண்டு அமைச்சர்கள் இருந்தும், மதுரைக்கு மேயரைத் தேர்ந்து எடுக்க துப்பு இல்லாத கட்சி திமுக. பேசாமல் மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டுச் செல்லுங்கள்” என்று காட்டமாக தெரிவித்தார்.