மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது கணவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தனது பதவிவிலகல் கடிதத்தை ஆணையரிடம் வழங்கியுள்ளார்.

மதுரை மாநகராட்சியின் மேயராக இருந்த திமுகவைச் சேர்ந்த இந்திராணி பொன்வசந்த் இன்று (அக்டோபர் 15) தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

சொத்து வரி முறைகேடு

மதுரை மாநகராட்சிப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து வரி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் அண்மையில் எழுந்தன. இந்த விவகாரத்தில், மேயர் இந்திராணி பொன்வசந்தின் கணவர் பொன்வசந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்.

இந்தச் சூழலில், சொத்து வரி முறைகேட்டில் சிக்கியதாகக் கூறப்படும் புகார்களைத் தொடர்ந்து, மதுரை மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்கள் ஏற்கனவே பதவி விலகினர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், தற்போது மேயரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேயரின் இந்த திடீர் ராஜினாமா, மதுரை அரசியல் வட்டாரத்திலும், மாநகராட்சி நிர்வாகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி கூட்டம்

மேயரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், துணை மேயர் தலைமையில் மாநகராட்சியின் அடுத்த கூட்டம் வரும் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.