- Home
- Tamil Nadu News
- விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க மறுத்த சீமான்.. லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. நாதகவினர் கலக்கம்!
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க மறுத்த சீமான்.. லெப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. நாதகவினர் கலக்கம்!
விஜயலட்சுமி தொடர்பான வழக்கில் சீமான் மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் விஜயலட்சுமியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சீமான்-விஜயலட்சுமி வழக்கு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை வாபஸ் வெற்ற அவர் மீண்டும் சீமான் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் உச்சநீதிமன்றம் சென்றதால் இந்த வழக்கில் சீமானிடம் விசாரணை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவரை கைது செய்யவும் தடை விதித்தது. இருவரையும் சமாதானமாக செல்லும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்
இதற்கிடையே விஜயலட்சுமியிடம் தொடர்பில் இருந்ததை ஒத்துக் கொண்ட சீமான், திமுகவின் தூண்டுதலின் பேரில் விஜயலட்சுமி இப்படி நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியிருந்தார்.
கடந்த 12ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சீமான் பொதுவெளியில் விஜயலட்சுமி குறித்து பேசியதற்காக செப்டம்பர் 24ம் தேதிக்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கத் தவறினால் சீமானைக் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று கூறியிருந்தனர்.
மன்னிப்பு கேட்க மறுத்த சீமான்
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில், 'நீதிபதிகள் உத்தரவிட்டும் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை' என்று கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ''இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தை எத்தனை நாள் தான் இழுத்துக் கொண்டு செல்வது. அப்படி இருவரும் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு வர வைக்க வேண்டியது இருக்கும்''என்று தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
அப்போது விஜயலட்சுமி தரப்பில் மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், ''நீங்கள் மன்னிப்பு கேட்க வில்லை என்றால், அவரை எப்படி மன்னிப்பு கேட்க சொல்ல முடியும். இருவரும் புகாரை திரும்ப பெற்றதையும், மன்னிப்பு கேட்டதையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஒரு ஊடகத்திலும் பேசக் கூடாது. எந்த ஒரு பேட்டியோ, வீடியோவோ வெளியிடக் கூடாது'' என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.