சென்னையில் அதிர்ச்சி! சரவணபவன் ஹோட்டலுக்கு திடீர் சீல்! நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஆலந்தூர் பகுதியில் அரசு நிலத்தில் இயங்கி வந்த சரவணபவன் ஹோட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான 15 கிரவுண்ட் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

சரவணபவன் ஹோட்டல்
சென்னையில் 25 கிளைகள் உள்பட உலகம் முழுவதும் 46 கிளைகளுடன் சரவணபவன் ஹோட்டல் இயங்கி வருகிறது. சைவ உணவகம் என்றாலே சரவண பவன்தான் எல்லோரது நினைவுக்கும் வரும் அளவுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலையிலேயே ஆலந்தூர் பகுதியில் செயல்பட்டு வந்த சரவணபவன் ஹோட்டலுக்கு சீல் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்பதை விரிவாக பார்ப்போம்.
அரசுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு
அதாவது குத்தகை காலம் முடிவடைந்த பின்னரும், சிலர் அரசு நிலங்களை காலி செய்யாமலும், குத்தகை மற்றும் வாடகை தொகையைச் செலுத்தாமலும் வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார்கள். இது தொடர்பாக, சில பொது நல அமைப்புகள் புகார் அளித்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. ஒரு சில வழக்குகளில் தீர்ப்புகள் அரசுக்கு சாதகமாக வந்தது.
சரவணபவன் ஹோட்டலுக்கு சீல்
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த 2022ம் ஆண்டு முதலே பல்வேறு வணிக நிறுவனங்களை இடித்து, அரசு நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்ட சரவணபவன் ஹோட்டல் ஊழியர்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஹோட்டலின் பெயர்ப் பலகையை அகற்றி கட்டடத்திற்கு சீல் வைத்தனர். அதாவது அரசுக்கு சொந்தமான 15 கிரவுண்டு அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 300 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.