- Home
- Tamil Nadu News
- நீலகிரிக்கு அதி கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 3 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில்!
நீலகிரிக்கு அதி கனமழை எச்சரிக்கையால் பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 3 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில்!
தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதும் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வடக்கு கர்நாடகா – தெலுங்கானா – ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதி கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் மழை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் (அதாவது காலை 10 மணிவரை) 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இன்று அம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.